• Mon. Mar 24th, 2025

திமுகவில் இணைகிறேனா? – நாம் தமிழர் கட்சி காளியம்மாள் பரபரப்பு பேட்டி

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் காளியம்மாள். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஊடக விவாதங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்து கொள்வார்.

சமீப காலமாக தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இந்த நிலையில் காளியம்மாளை, பிசிறு என சீமான் விமர்சனம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிருப்தியடைந்த காளியம்மாள், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜோஜ் என்பவரின் குழந்தையின் முதல் திருவிருந்து விழா அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் ஆகியோர் பெயர்களுடன் காளியம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் காளியம்மாள் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்; விரைவில் சொல்கிறேன் என காளியம்மாள் பதில் அளித்துள்ளார்.