
கரூர் அருகே நீரேற்று நிலைய மோட்டார் அறையில் இருந்த காப்பர் ஒயர், மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருட முயற்சித்த இருவரை ஊர் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய வடுகபட்டி கிராமத்தில் நீரேற்று நிலையத்தின் மோட்டார் அறை அமைந்துள்ளது. இந்த அறையில் இருந்து சத்தம் வருவதை அறிந்த ஊர் இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பேர் மோட்டார் அறையில் இருந்த காப்பர் ஒயர், மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை திருட முயற்சித்த போது, கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதனை தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், ஊர் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து வாங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரித்ததில், கருப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சுதாகரன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் தங்கி விட்டு, பகல் நேரங்களில் இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து இருவரையும் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
