உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காது என்பதற்கேற்ப ஒன்றரை அடியில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சென்னை மயிலாப்பூரில் கோவில் உள்ளது. வள்ளுவர் அவதரித்த இடம் என்று கூறப்படும் திருவள்ளுவர் கோவில் சென்னை மயிலாப்பூர் சமஸ் கிருத கல்லூரிக்குப் பின்புறம் உள்பகுதியில் சிறிய அளவில் அமைந்துள்ளது. அங்கு வள்ளுவர் வாசுகி தம்பதியருக்கு தனித்தனி சந்நிதியும் வள்ளுவர் தோன்றிய இலுப்பை மரத்தின் தண்டுப் பகுதியும் இங்கு அமைந்துள்ளது.
மனிதர்களின் வாழ்வியலுக்கு தேவையான 1330 திருக்குறள்களை எழுதி உள்ள திருவள்ளுவர், அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளாக பிரித்தும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 113 அதிகாரிங்களையும் பிரித்து அழகாக விவரித்து உள்ளார். திருக்குறள் உலகப் பொதுமறையாக கருதப்படுகிறது.வள்ளுவர் பிறந்த இடம் என்று வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், மயிலையில் மட்டும் தான் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் மாலை, மரியாதை அணிவிக்கப் பட்டு விழாவும் நடைபெறுகிறது.
வள்ளுவர் ஆண்டு அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2050ஆண்டுகள் ஆவதாக தகவல்கள் கூறுகின்றன. . தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.தமிழக அரசு திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இன்று சென்னையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.