• Sun. Jun 4th, 2023

தஞ்சை பெரிய கோவிலின் சுவாரஸ்ய தகவல்கள்

Byகாயத்ரி

Jan 19, 2022

தமிழர்களின் அடையாளம் கட்டட கலையின் பெருமிதம் பிரம்மாண்டத்தின் உச்சம் சோழ பேரரசன் இராஜராஜசோழனின் தனிப்பெரும் சின்னம் என்று பெருமைக்குரிய அடையாளங்களை கொண்டது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த கோயிலில் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் என்பன பொதிந்து கிடக்கின்றன.தமிழகத்தின் முதுபெரும் சாட்சியாக பெருவுடையார் கோவில் இன்றும் என்றும் திகழ்கிறது.இதன் சுவராஸ்ய தகவல்களை தற்போது காணலாம்.

1997ஆம் ஆண்டிற்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.

கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலக் கோயில்களில் கோபுரங்கள் உயரமாக அமைந்திருக்கும் நிலையில், இந்தக் கோவிலில் விமானம் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் ஆனது. விமானத்தின் நிழல் தரையில் விழாது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது உண்மையல்ல.

பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென பலர் வழக்குத் தொடர்ந்ததால், தமிழ் – சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து குடமுழுக்கு நடத்தப்படுமென இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

உலகிலேயே பெரிய சிவலிங்கம் இந்த கோவிலின் மூலமூர்த்தியாக அமைந்திருக்கின்றது.இந்த சிவலிங்கம் தமிழின் மெய் எழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்திலும் உயிர் எழுத்துக்கள் 12 என்பதனால் இந்த லிங்கம் 12 அடி உயரம் உடையதாகவும் தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகவும் தமிழ் பெருமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் தமிழின் பெருமைகளை அறிந்து கொண்டு தமிழர்கள் என்று எண்ணி பெருமிதம் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *