• Wed. Apr 23rd, 2025

ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்க

Byவிஷா

Mar 1, 2025

வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளையும், மூலிகைச் செடிகளையும் வளர்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பூச்செடிகள் வீட்டிற்கு அழகைச் சேர்க்கும். மூலிகைச் செடிகள் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும். பெண்கள் பலருக்கும் ரோஜா பூ என்றால் அலாதி பிரியம். நர்சரிகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் ரோஜா செடிகளில் அதிகளவு பூக்கள் பூக்கும். ஆனால், வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளில் குறைவாகவே பூக்கள் பூக்கின்றன . அதிகளவில் ரோஜா பூக்கள் பூப்பதற்கு, நாம் அதற்கென கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
அதற்கு சரியான ஊட்டச்சத்து தேவை. பத்து பைசா செலவு செய்யாமல் ரேஷன் கோதுமையிலிருந்து வளர்ச்சியூக்கி உரம் தயாரிப்பது எப்படி?. ரேஷன் கோதுமையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உண்டு. பொதுவாக எல்லா விதமான கோதுமையிலும் உள்ள சத்துக்கள் வளர்ச்சி ஊக்கியாக நுண்ணுயிரிகளை பெருக்க செய்யக்கூடிய அற்புதமான தன்மையை கொண்டு விளங்குகிறது. நாம் ரேஷன் கடையிலிருந்து வாங்கி வைத்திருக்கும் கோதுமையில் இருந்து ஒரு கப் அளவிற்கு எடுத்தாலே 10 செடிகளுக்கு மேலே கொத்து கொத்தாக பூக்களை பூக்க செய்யக்கூடிய உரத்தை தயாரித்து விடலாம்.
ஒரு கப் அளவிற்கு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் சம அளவிற்கு நாட்டு சர்க்கரை அல்லது மண்டை வெல்லம் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கரைத்து வைத்த இந்த கரைசல் ஒரு வாரம் வரை புளிக்க வேண்டும். புளித்து, நுரைக்க ஆரம்பித்தால் அதில் ஏராளமான நுண்ணுயிரிகள் பெருக துவங்கும். இந்த நுண்ணுயிரிகள் தான் நம்முடைய மண்ணை வளமாக்க செய்கிறது. மண் வளமாகும் பொழுது வளர்ச்சி ஊக்கியாக செடிகளுக்கு அது செயல்படுகிறது. மண்புழுக்கள் உற்பத்தியை இது தூண்டி விடுகிறது. நீங்கள் தயார் செய்து வைத்துள்ள இந்த புளித்த கரைசல் அரை லிட்டர் அளவிற்கு எடுத்தால் அதனுடன் 5 லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் நீங்கள் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளுக்கு அது நல்ல ஒரு உரமாக அமையும். நேரடியாக அப்படியேஊற்றி விடக்கூடாது எல்லாவிதமான ரோஜா செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.. 15 நாட்களுக்கு ஒரு முறை எல்லா விதமான செடிகளுக்கும் தயார் செய்து வைத்துள்ள உரத்துடன் தண்ணீர் சேர்த்து அரை லிட்டர் அளவிற்கு மட்டும் செடிகளின் வேர்களில் உரமாக ஊற்ற வேண்டும். ரோஜா செடி மட்டும் அல்ல காய், கனி செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
பன்னீர் ரோஜா, காஷ்மீர் ரோஜா, பட் ரோஸ், பட்டன் ரோஸ் என்று எல்லாவிதமான ரோஜா செடிகளுக்கும் இந்த உரத்தை கொடுத்து வந்தால் கொத்து கொத்தாக கிளை முழுவதும் பூக்களாக பூத்து தள்ளும். அந்த அளவிற்கு நல்ல ஒரு வளர்ச்சியூக்கியாக செயல்படும். ரோஜா செடிகளில் போதிய அளவிற்கு சூரிய வெளிச்சம் படுமாறு பாதுகாக்க வேண்டும்.
அதிகம் வெயில் இருக்கும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அல்லது இலைகளை, பூக்களை அவ்வபொழுது கத்தரித்து எறிய வேண்டும். ஒருமுறை கிளையில் நன்கு பூ பூத்து விட்டால் அந்த பூவை அப்படியே விட்டு விடக்கூடாது, பறித்து விட வேண்டும். இப்படி நீங்கள் உங்களுடைய செடிக்கு பராமரிப்பு கொடுத்து பாருங்கள், உங்க வீட்டு ரோஜா செடியும் பூத்துக் குலுங்கும்.