• Mon. May 29th, 2023

இன்று மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள்

ByKalamegam Viswanathan

May 4, 2023

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912).

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார் மறுமணம் செய்துகொண்டு மாசாச்சுசெட்சு மாநிலத்தில் உள்ள வெசுட்டுஃபோர்டு என்னும் இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே நெட்டி மரியா 1880ல் வெசுட்டுஃபோர்டு அகாதெமியில் பட்டம் பெற்றார். நெட்டி இசுட்டீவன்சு அங்கே பள்ளியில் ஆசிரியராகவும் நூலகராகவும் பணிபுரிந்தார். படிப்பிப்பதில் உடற்கூற்றியல், விலங்கியல் போன்றவையும் கணிதம், இலத்தீன்மொழி, ஆங்கிலமொழிப்பாடங்களும் இருந்தன. அருகே இருந்த மார்த்தா திராட்சைத்தோட்டத்தில் (வினியார்டு) 1890ல் நிகழ்ந்த கோடைக்கால பயிற்சிப்பாடங்கள் கற்பதில் பங்குகொண்டமையால் விலங்கியலில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றார்கள்.

மூன்று பருவங்கள் பயிற்றுவித்தப்பின்னர் அவர் தன்னுடைய கல்வியை அப்பொழுது வெசுட்டுஃபோர்டில் நார்மல் பள்ளி என அறியப்பட்டு இன்று வெசுட்டுஃபோர்டு மாநிலப்பல்கலைக்கழகம் என அறியப்படும் நிறுவனத்தில் தொடர்ந்தார். நான்காண்டுக் கல்வியை இரண்டாண்டிலேயே நிறைவுசெய்தார். வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாவதாகத் தேறினார். வகுப்பில் முதலாவதாகத் தேறியபின்னர் இசுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1899ல் இளங்கலைப் பட்டமும் 1900ல் முதுகலைப்பட்டமும் பெற்றார். அதன்பின்னர் மேலும் தொடர்ந்து ஓராண்டு மேற்பட்டப்படிப்பில் இவர் பேராசிரியர் சென்கின்சு அவர்களிடம் உடற்கூற்றியலில் பயிற்சி பெற்றார். பேராசிரியர் மெக்ஃபார்லாந்திடம் செல்லியலில் பயிற்சிபெற்றார்.

பிரையன் மாவர் கல்லூரியில் முதலாண்டிலேயே உயிரியலில் மேற்படிப்பைப் பெற கல்வியுதவித்தொகை பெற்றார். அடுத்த ஆண்டு தலைவரின் ஐரோப்பிய சிறப்பாளராகத் தேர்வுபெற்று இடாய்ச்சுலாந்தில் வூர்ட்சுபெர்கு பல்கலைக்கழகத்தில் படிக்கச்சென்றார். அங்கே அவர் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஃகெல்கோலாந்திலும் (Helgoland) நேப்பில்சு விலங்கியல் நிலையத்திலும் (Naples Zoological Station) படித்துவந்தார். பிரையன் மாவர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றபின்னர் வாசிங்கடன் கார்ணிகி கழகத்தில் 1904–1905 ஆண்டுகளில் ஆய்வு உதவித்தொகை பெற்றார். 1905ம் ஆண்டு சிறந்த் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெண்ணுக்கான பரிசாக 1000 அமெரிக்க வெள்ளி பெற்றார். இன்னொரு ஆய்வான விந்துத்தோற்றவியல் (Spermatogenesis) பற்றிய அவருடைய ஆய்வே நிறப்புரியில் ஆண்-பெண் வேற்றுமைகாணும் புகழ்மிக்கத் துறையில் நுழைவு ஏற்பட உதவியது. 1905 ஆம் ஆண்டு இவரும் எட்மண்டு பீச்சர் வில்சன் (1856–1939) என்பவருந்தான் முதன்முதலாக தாங்கள் தனித்தனியாக ஆண்-பெண் வேறுபாட்டை நிறப்புரி (குரோமோசோம்) அடிப்படையில் நிறுவியவர்கள். இதுவே நிறப்புரியில் XY வேறுபாடுவழியாக பால்வேறுபாட்டை நிறுவிய முதலாய்வு இந்த நிறுவனத்தில்தான் 1905 ஆண்டின் ஆய்வுத்தாள் வெளியிடப்பெற்றது.

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ நெட்டி மரியா இசுட்டீவன்சு முனைவர்ப்பட்டம் பெற்ற 9 ஆண்டுகளிலேயே மே மாதம் 4, 1912ல் தனது 50வது அகவையில், மேரிலாந்தில் உள்ள பால்ட்டிமோர் நகரத்தில் மார்பகப் புற்றுநோயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். குறுகிய காலத்தில் இவர் 40 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *