• Fri. Mar 31st, 2023

இன்று உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம்

ByKalamegam Viswanathan

Mar 10, 2023

தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள் உங்களைக் காண வேண்டும்” “(Watson, come here, I want to see you) என்றார். அவைதான் தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார்.


பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். ஹலோ’ என்ற வார்த்தையை முதலில் தாமஸ் எடிசன் தொலைபேசியில் பதிலளித்தார். பின்னர் அது அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கான தரமாக மாறியது. அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர் யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் உலகத்தில் கருதப் படுகிறார். தனது புதிய கருவியைப் பெல் விரைவில் வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன்படப் பதிவு உரிமை பெற்றார்.
அவ்வாறு அவர் முதன் முதலில் உருவாக்கிப் பயன்படுத்திய தொலைபேசிக் கருவியில் பல குறைபாடுகள் இருந்தன. அவை பிற்காலத்தில் படிப்படியாக சரி செய்யப் பெற்று தொலைபேசி முன்னேற்றம் பெற்றது. தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார். இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர், ‘கேளுங்கள் என் குரலை – அலெக்சாண்டர் கிரகாம் பெல்’ என்று கூறியுள்ளார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *