• Fri. Apr 26th, 2024

இன்று யுகங்களை கணித்த உலக சித்தர்கள் நாள்

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 )

உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14 ல் சித்திரைப் புத்தாண்டு நாளே உலக சித்தர்கள் நாளாகும். சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14. ஒவ்வொருவருடமும் ஏப்ரல் மாதம் 14ம் தேதியை உலக சித்தர்கள் தினமாகப் போற்ற வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்தது. சித்திரைக்கும் சித்தர் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று வரலாறு கூறுகிறது.

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்தாலும், வாசி எனப்படும் சுவாசம் மூலமாக காலம் கணிக்கப்பட்டிருப்பதையும் சித்தர்கள் நிரூபித்திருக்கிறார்கள். முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள். இதயம் என்ற தாமரை வழியாக சுவாசம் போகும்போது. நான்கு அங்குலம் போக மீதி சரியாகத் திரும்பி வரும் போது சுவாசத்தைக் கணித்திருக்கிறார்கள். அது இருபத்தோராயிரத்து அறுநூறு முறை நடக்கிறது. அதுவே அறுபது நாழிகை கொண்ட ஒருநாள். நாழிகை ஒன்றுக்கு நம் சுவாசம் 360 அறுபது, அதாவது ஒரு நாளைக்கு நம் சுவாசம் 21,600 முறையாகும். இதன்படி கணக்கிட்டுப் பார்த்த போது 360 நாள் – 21,600 நாழிகை கொண்டது என்றும், அதுவே ஒரு வருடம் என்றும் சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள். இதேபோல் யுகங்களின் கணக்கும் இப்படி கூறுப்படுகிறது. 21,600-ஐ என்பதால் பெருக்கினால் கிருதயுகம். அறுபதால் பெருக்க திரேதாயுகம். நாற்பதால் பெருக்க துவாபரயுகம். இருபதால் பெருக்க கலியுக மொத்த ஆண்டாகும் எனப்படுகிறது.

பஞ்சாங்கத்தில் பார்த்தால், மேற்படி யுகங்களுக்குரிய வருடங்கள் சரியாக இருப்பதைக் காணலாம். சித்தர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிட முடியாது. அவர்களாக ஜீவசமாதி அடைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது. இயற்கையுடன் இயைந்து வாழவேண்டுமென்பதை நினைவூட்டவே உலக சித்தர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்கால நவீன விஞ்ஞான வளர்ச்சியாலும், ராசாயனக் கலவையாலும், நச்சுப்புகையாலும் இயற்கையான நிலை மாறிவருகிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. வளரும் விஞ்ஞானத்தால் ஆதாயங்கள் பல பெற்றாலும் பாதகங்களும் உடல்நல பாதிப்பும் அதிகமாகவே காணப்படுகின்றன. சித்தர்கள் ஆராய்ச்சிசெய்து வெளிப்படுத்தியது தான் சித்தமருத்துவம், தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞான சக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்தாக அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக் கொண்ட மருத்துவத்திற்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி, மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.

கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம் சிமிழ்வித்தை, சூத்திரம், சிற்ப நூல் மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரே சமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உண்டு. அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர்பெருமக்களும் உண்டு. சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோயில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுதுத் திகழ்கின்றன. மேலும் சித்தர்கள் ஜீவசமாதியான இடத்திற்குச் சென்று, வழிபட்டால் நமது துன்பங்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும் கோயில்கள் மட்டுமல்ல. சித்தர்கள் அருளும் சமாதிகளும் தோஷங்கள் நிவர்த்திசெய்யும் தலங்களாகப் பார்க்கப்படுகின்றன. நவகிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர் அழுகணிச் சித்தர் இவரை வழிபட்டால் நாகதோஷம் அகலும். இவர் சித்தியடைந்த இடம் நாகப்பட்டினம். இவரைப்போலவே குதம்பை சித்தர் கேது தோஷம் நீக்கும் சக்தி பெற்றவர். மனநலம் பாதிக்கப் பட்டவர்களும், டென்ஷன் பேர்வழிகளும் இவரை வழிபட்டு நலம்பெறுகிறார்கள். இவர் சித்தியடைந்த இடம் மயிலாடுதுறை. ராகு பகவானைப் பிரதிபலிக்கும் பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது சிறுகனூர் திருப்பட்டூர் தலம். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பிரம்மன் சன்னிதிக்கு வலப்புறம் ஆதிசேஷன் அவதாரமான பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தால் கேதுவினால் ஏற்படும் தோஷம் மட்டுமல்ல, அனைத்து நாகதோஷங்களும் நீங்குமென்பர். இந்த கோயிலுக்கு வடபுறத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளது. அதன் புறவாசலின் முன்பகுதியில் புலிக்கால் முனிவர் என்னும் வியாக்ரபாத முனிவரின் பிருந்தாவனம் உள்ளது. அவரை பிரார்த்தனை செய்து வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும். சித்தர்களுக்கெல்லாம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும் குறுமுனி என்று போற்றப்படும் அகத்தியர் கயிலை மலையில் நடந்த சிவ-பார்வதி திருமணக்காட்சியை பொதிகை மலையிலிருந்தவாறு தரிசித்தவர்.

சித்ரா பவுர்ணமியன்று இரவில், ஒரு சில பகுதிகளில் பூமியிலிருந்து ஒருவகை உப்புவெளிப்படும். இதை பூமிநாதம் என்று சொல்வர். இந்த உப்பு, சித்தமருத்துவத்துறையில் முக்கிய இடத்தைப் பெறும் இது மூலிகையிலுள்ள ஜீவசக்திகள் வீரியத்துடன் விளங்க உதவுகிறது. இந்த உப்பு, சித்ரா, பவுர்ணமியன்று வெளிப்படுவதை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே. சித்ரா பவுர்ணமி ஆதியில் சித்தர் பவுர்ணமி எனப்பட்டது. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள். சித்ரா பவுர்ணமியின் உண்மையையும் சக்தியையும் கண்டு, மனித குலம் நலமுடன் வாழ வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் சித்தர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் காட்சி தரும் சித்தர்களைப்போல் ஜடாமுடி, தாடியுடன் காட்சி தருவதில்லை. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும் மற்ற நாடுகளிலும் சித்தர்கள் வாழ்கிறார்கள். யோகா, தியானம், வான் ஆராய்ச்சி போன்றவையெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை, அவர்களை அடையாளம் கண்டு அங்கு வாழும் மக்கள் போற்றுகிறார்கள்.

விண் அறிவியல், அணு அறிவியல், மருத்துவ அறிவியல், ஐந்திணை அறிவியல், கால ஒழுக்கம், சமய அறிவியல் என பல்துறை அறிவியல் ஆய்வுகளில் முத்து குளித்து பல்வேறு விஞ்ஞான முத்துக்களை ஓலைச்சுவடிகளாக, கல்வெட்டு எழுத்துகளாக, ஏட்டுப்பிரதிகளாக இந்த தமிழ் உலகிற்கு அருட்கொடையாக தந்துள்ளனர். பெருஞ்செலவு செய்து, நீண்டகாலம் ஆய்வு செய்து நாம் தற்போது கண்டறிந்த அறிவியல் கருத்துக்களை எல்லாம் சித்தர்கள் தங்கள் மெஞ்ஞானத்தால் உணர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறியிருப்பது ஒரு அறிவியல் அதிசயமாகும். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பெரும் பிரளய வெடிப்பினால், நெருப்பு தோன்றி, ஹைட்ரோ கார்பனால் இந்த உலகம் தோன்றியது என்ற ‘பிக் பேங்’ தியரி பல நுாறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சொன்னதை, சித்தர்கள் தங்கள் பாடலில் மிக அழகாக சொல்லி வைத்துள்ளனர். மருந்துகள், உலோகங்கள், மின் சாதனங்கள் என ‘நானோ’ தொழில் நுட்பம் பெருகி வரும் சூழலில், எந்த நிலையில் ஆற்றல் அதிகம் என்பதை திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிஉள்ளார். திருமூலர், அணுவினை உடைத்து, அணுகும் வல்லமை படைத்தவர்களால் இவ்வுலகையே தன் வயப்படுத்த முடியும் என அணுவின் ஆற்றலை சிறப்பித்து கூறியிருக்கிறார்.

தாங்கள் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் நீர் மற்றும் உணவுகளை மட்டுமே அருந்த வேண்டும். அதற்கேற்றார் போலவே நமது இயல்பும் இருக்கும் என்று சித்தர்கள் முன்பே சொல்லியுள்ளனர். குறிஞ்சி போன்ற மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் கிழங்குகளையும், முல்லை போன்ற வனப்பகுதிகளில் வசிப்பவர்கள் பழங்களையும், மருதம் என்ற வயல் பிரதேசங்களில் வசிப்பவர்கள் விவசாயம் செய்து கிடைக்கும் தானியங்களையும், நெய்தல் என்ற கடல் சார்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மீன், நண்டு ஆகியவற்றையும் உண்ண வேண்டும். பாலை நிலம் மனிதர்கள் வசிக்க உகந்தது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். சித்தர் பாடல்களால் நாசித்துவாரம் மற்றும் பிற உடல் துவாரங்கள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யும் முறை மற்றும் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளின் பெயர்கள் மற்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர் மற்றும் நாக முனிவரின் நயன மருத்துவ நுால்களில் செப்புச் சலாகையால் கண்புரையை நீக்கும் முறை மற்றும் பிற உயிரினங்களின் கண்களை பொருத்தும் முறைகளையும் விளக்கியுள்ளது.

நோயில்லா வாழ்வு மலம், சிறுநீர் அடக்காமல், காம இச்சை பெருக்காமல், நீரை கொதிக்க வைத்து, மோரை நீர் சேர்த்து பெருக்கி, நெய்யை உருக்கி உண்பவர்களை நோய் அணுகாது என தேரையர் குறிப்பிட்டுள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தியும், 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதியும், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கில் மருந்தும், வாரம் ஒரு முறை நகம் வெட்டுதல் மற்றும் சவரமும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலை முழுகலும், 3 நாட்களுக்கு ஒரு முறை கண்ணில் மையும் இடுவதால் இளமையை தக்கவைக்கலாம் என சித்தர் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தர்கள் யாவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து அதனை பதிவு செய்து வைத்து உள்ளனர். அவற்றின் முறையை ஆராய்ந்தால் இவ்வுலக மேம்பாட்டிற்கான பல்வேறு அறிவியல் உண்மைகளையும், ஆய்விற்கான அடிப்படை தளத்தையும் நாம் பெற முடியும். சித்தர்களின் தினமான தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள் சித்திரை 1 அன்று சித்தர்கள் தமிழுக்கும், உலகத்திற்கும் வழங்கிய அறிவியல் கொடையை போற்றுவோம். அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *