யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972)
அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில் இறங்கும் திட்டத்தோடு ஏவப்பட்டதாகும். நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும். செ-திட்டங்களில் இது இரண்டாவதாகும். இத்திட்டத்தின் ஆணையாளர் சான் யங், நிலவுப் பெட்டக விமானி சார்லசு டூக், கட்டளைப் பெட்டகத்தின் விமானி கென் மாட்டிங்லி ஆவர். ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் 16, 1972 அன்று 12:54 PM EST-ல் ஏவப்பட்டது. ஏப்ரல் 20, 1972ல் நிலவை சென்று அடைந்தது. பதினோரு நாட்கள், ஒரு மணி மற்றும் ஐம்பத்தோரு நிமிடங்கள் நீடித்த இத்திட்டம் ஏப்ரல் 27 அன்று 2:45 PM EST-ல் முடிவடைந்தது.
யோன் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர். மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.
யோன் வாட்ஸ் யங் (John Watts Young) செப்டம்பர் 24, 1930ல் சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 16 விண்கலத்தில் நிலவுக்குச் சென்று நிலவில் நடந்த 9-வது மனிதர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் அதிக ஆண்டுகள் விண்வெளி வீரராகப் பணியாற்றியவர் என்ற சாதனையையும் இவர் படைத்தார். இவரது 42 ஆண்டுகால சேவையில் நாசா சேவையில், ஆறு விண்வெளித் திட்டங்களில் பங்கு கொண்டு சாதனை புரிந்தார். ஜெமினி திட்டத்தில் ஜெமினி 3, ஜெமினி 10 ஆகிய பயணங்களிலும், அப்பல்லோ திட்டத்தில் அப்பல்லோ 10, 16 ஆகிய பயணங்களிலும், விண்ணோடத் திட்டத்தில் எஸ்டிஎஸ்-1, 9 ஆகிய பயணங்களிலுமாக இவர் ஆறு விண்வெளிப் பயணங்களில் வெற்றிகரமாக பங்குபற்றியுள்ளார்.
1965-ஆம் ஆண்டில் ஜெமினி திட்டத்தின் முதலாவது மனித விண்வெளிப் பயணத் திட்டமான ஜெமினி 3ல் முதற்தடவையாகப் பயணம் செய்தார். பின்னர் அதே திட்டத்தில் 1966ல் ஜெமினி-10 விண்கலத்தில் முதன்மை வீரராக சென்றார். 1969ல் ஏவப்பட்ட அப்பல்லோ 10 விண்கலத்தில் சென்று சந்திரனைத் தனியே சுற்றி வந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் புரிந்தார். அப்பல்லோ 16 விண்கலத்தில் சென்று சந்திரனின் தரையில் தரையுலவியை இயக்கினார். இரு தடவைகள் சந்திரனுக்குச் சென்ற மூவரில் இவரும் ஒருவர் ஆவார். அத்துடன், 1981 இலும் பின்னர் 1983 இலும் மேற்கொள்ளப்பட்ட விண்ணோடப் பயணங்களிலும் முதன்மை வீரராகச் சென்றார். யங் 2004ம் ஆண்டில் நாசாவில் இருந்து பணி ஓய்வு பெற்றார். யோன் வாட்ஸ் யங் 2018 சனவரி 5 இல் காலமானார் ஜனவரி 5, 2018ல் தனது 87வது அகவையில் டெக்சஸ், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.