• Fri. Sep 29th, 2023

இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் இன்று (ஜூன் 9, 1781).

ஜார்ஜ் ஸ்டீபென்சன் (George Stephenson) ஜூன் 9, 1781ல் இங்கிலாந்து நாட்டிலுள்ள நார்தம்பர்லேண்ட் பகுதியைச் சேர்ந்த வைலம் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராபர்ட். தாய் மேபல். இவர்களுக்கு இரண்டாவது மகனாக ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்தார். இவருடைய தந்தை நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தந்தை குறைந்த கூலியைப் பெற்று வந்ததால் குடும்பத்தில் வறுமை காரணமாக இவரால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் மாடு மேய்ப்பது இவருடைய பணியாக இருந்தது. பிறகு பதினேழு வயதான போது, தந்தையுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றினார். இங்கு கிடைத்த கூலிப்பணம் இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்வி பெற இவருக்கு உதவியாக அமைந்தது. இவர் படிக்க ஆரம்பித்ததும் அதன் காரணமாக இவருடைய பணியின் தன்மையும் உயர்ந்தது. 1802ல் இவர் பிரான்சஸ் ஹென்டெர்சன் என்ற மங்கையை மணம் செய்து கொண்டார். பின்னர் வில்லிங்டன் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்தார். அங்கும் ஒரு சுரங்கத்தில் பணிபுரிந்தார். பணி நேரம் போக மற்ற நேரங்களில் காலணிகளைத் தயாரிப்பது கடிகாரங்களைச் செப்பனிடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். இவை ஜார்ஜ் ஸ்டீபென்சனுக்கு அதிக வருமானத்தை அளித்தன.

1803ல் இவருக்கு இராபர்ட் என்ற மகன் பிறந்தான். 1804ல் கில்லிங்வொர்த் என்ற பகுதியைச் சேர்ந்த வெஸ்ட்மூர் என்ற ஊரில் குடியேறினார். அங்கு இவர் பணியாற்றுகையில் இவ்வினையருக்க ஒரு மகள் பிறந்து சில வாரங்களில் இறந்துவிட்டார். 1806ல் இவருடைய மனைவியும் காலமானார். இதன் பிறகு இவருக்கு ஸ்காட்லாந்து சென்று பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது அப்போது தனதுமகன் இராபர்டை தனது சகோதரி எலினர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். இவர் ஸ்காட்லாந்து சென்ற சில மாதங்களுக்குப் பிறகு இவருடைய தந்தைக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் கண்பார்வை பறி போனது. எனவே இவர் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. 1820ல் இவர் விவசாயி ஒருவரின் மகளான எலிசபெத் ஹின்ட்மார்ஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. குறுகிய காலமே வாழ்ந்த எலிசபெத் 1825ல் மரணமடைந்தார்.

கில்லிங்வொர்த்தில் நீரிறைக்கும் குழாய் ஒன்று பழுதுபட்டது அதைச் சரி செய்வதற்காக இவர் அழைக்கப்பட்டார். அதை இவர் வெற்றிகரமாகச் செய்து முடித்ததால், நீராவியால் இயங்கும் பொறிகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து விடுதலை பெற பாதுகாப்பான விளக்கு (Safety Lamp) ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதே சமயம் புகழ்பெற்ற அறிவியலறிஞர் சர்.ஹம்ப்ரி டேவி என்பவரும் இதே முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எவ்வித அறிவியல் அறிவும்பெறாத ஸ்டீபென்சன் அந்த முயற்சியில் வெற்றி பெற்றார். டேவியின் விளக்கில் சுற்றிலும் கம்பி வலை அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டீபென்சனின் விளக்கு கண்ணாடி உருளையில் அமைந்தது. டேவியின் கருத்தைத் தழுவியே இவ்விளக்கை அமைத்ததாக ஜார்ஜ் ஸ்டீபென்சன் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏனெனில், இவர் கண்டு பிடித்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் டேவி தான் விளக்கு கண்டுபிடித்த விவரத்தை இராயல் கழகத்திடம் அளித்திருந்தார். ஆனால் விசாரனைக்குப் பின் ஜார்ஜ் தனியாகத்தான் இதைக் கண்டு பிடித்ததாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கல்வியறிவு இலாத ஒருவர் இதை எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும் என டேவி தரப்பினர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். 1933 ல் காமன்ஸ் சபை இதனைத் தீர ஆராய்ந்து டேவியின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

நீராவியால் தானே இயங்கும் ஓடும் இயந்திரத்தி வடிவமைக்க இவர் முயற்சிகள் மேற்கொண்டார். ரிச்சர்ட் ட்ரெவிதிக் என்பவர் 1804ல் நீராவியால் ஓடும் முதல் இயந்திரத்தை உருவாக்கினார். அது மணிக்கு நான்கு மைல் வேகத்தில் மரத் தண்டவாளத்தில் ஓடியது. ஜார்ஜ் ஸ்டீபென்சன் அதில் உள்ள குறைகளைக் களைந்து 1825ல் ஸ்டாக்டன் என்னும் ஊரிலிருந்து டார்லிங்டன் என்ற ஊர்வரை இரும்புத் தண்டவாளம் மூலம் தொடர்வண்டிப் பாதை அமைத்து, நீராவி எந்திரம் மூலம் அவ்வண்டியைத் தானே ஓட்டியும் காட்டினார். அப்பொழுது தயாரிக்கப்பட்ட அந்த இயந்திரமே உலகப் புகழ்பெற்ற ‘இராக்கெட்’ என்ற புகைவண்டியாகும். இதற்கும் முன்பே 1820ல் 13 கி.மீ. தூரம் ஹெட்டன் சுரங்கம் முதல் சுந்தர்லேண்ட் வரை இரயில் பாதை அமைத்துப் புகைவண்டியை ஓட்டினார். இதுவே விலங்கு சக்தியின் துனையின்றி தானே இயங்கிய முதல் தொடர்வண்டிப் பயணம் ஆகும்.

1821ல் பல சுரங்கங்களை இணைக்கும் வகையில் 40 கி.மீ. தொலைவு பாதை அமைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்ததது. அப்பணியை ஜார்ஜ் ஸ்டீபென்சனிடம் ஒப்படைத்தது. அதை அமைக்கும் முயற்சியில் ஸ்டீபென்சனுக்கு அவருடைய 18 வயதான இவருடைய மகன் இராபர்ட்டும் உதவி செய்தார். இது போன்ற இரயில் பாதைகளை உருவாக ‘இராபர்ட் ஸ்டீபென்சன் நிறுவனம்’ ஒன்றை உருவாக்கித் தன்னுடைய மகன் இராபர்ட்டை அதன் நிர்வாக இயக்குநராக அமர்த்தினார். இந்நிறுவனம் மூலம் இங்கிலாந்து முழுவதும் பல இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இவர் அமைத்த இரயில் பாதைகளின் அகலம் 1440 மி.மீ (1.4 மீ) ஆக இருக்கும் படி அமைக்கப்பட்டன. இந்த அளவே உலகம் முழுமைக்கும் இரயில் பாதை அமைக்கும்போது பின்னாளில் பின்பற்றப்பட்டது. அதன் பின்னர் சுமார் 10 வருட காலம் தொடர்ந்து வெவ்வெறு இடங்களில் இரயில் பாதைகள் அமைக்கும் பணிகளில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் தொடர்ந்து ஈடுபட்டார். எழுத்தறிவு பெறாமல் அறிவியலில் அருஞ்சாதனை புரிந்த இவரின் புகழை இன்றைக்கும் ஓடிக் கொண்டிருக்கும் தொடர்வண்டிகள் பறைச்சாற்றுகின்றன.

இரயில் வண்டிகள் இயக்கவும், இரயில் பாதைகளை உருவாக்கவும் ஜார்ஜ் ஸ்டீபென்சன் எடுத்த முயற்சிகளால் தொழிற்புரட்சியே ஏற்பட்டது. தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் படுபவர். நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப் பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தவர். 4 அடி 8 1/2 அங்குலம் (1,435 மிமீ) நீளத்திற்கு இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது. அது “ஸ்டீபன்சன் பாதை” என அழைக்கப்படுகிறது. உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பெறாவும், சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைந்து இடையூறின்றி பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய உதவியாக அமைந்தன. 1847ல் எந்திரப் பொறியாளர் பயிற்சி நிறுவனத்தின் முதல் தலைவராக ஜார்ஜ் ஸ்டீபென்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் ஆகஸ்ட் 12, 1848ல் தனது 67வது அகவையில் இங்கிலாந்தில் நுரையீரல் நோயினால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். டெர்பிஷைர் பகுதியில் செஸ்டர்ஃபீல்டு ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பயன்படுத்திய பொருள்கள் ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவருடைய பித்தளை உருவச்சிலை ஒன்று செஸ்டர்ஃபீல்டு இரயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது போலவே இவர் வடிவமைத்த ‘இராக்கெட்’ என்ற இரயில் எந்திர மாதிரி வடிவம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கி இவருடைய உருவப்படம் அச்சிட்ட பண நோட்டுகளை வெளியிட்டுள்ளது இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed