கருந்துளைகளின் கதிர்வீச்சு ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்ற ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் நினைவு தினம் இன்று (மார்ச் 14, 2018).
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஜனவரி 8 , 1942ல் இங்கிலாந்து, ஆக்சுபோர்டு நகரில் பிராங்கு இசபெல் ஆக்கிங்கு ஆகியோருக்கு கலீலியோ கலிலியின் 300வது நினைவு நாளில் பிறந்தார். குடும்ப நிதி நெருக்கடியிலும், ஆக்கிங்கின் பெற்றோர் இருவரும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். தந்தை மருத்துவத்துறையிலும், தாயார் அரசியல் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார்கள். இருவரும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர். 1950ல் அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், ஒட்டுண்ணியியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் செயிண்ட் அல்பான்சு என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர். அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster School இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் செயிண்ட் அல்பான்சு பள்ளியிலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார். ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது.
அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / விமான மற்றும் படகு ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, கிறிஸ்தவம் மற்றும் புலன் புறத்தெரிவு போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். 1958 இல், அவர்களது கணித ஆசிரியரின் உதவியுடன், கடிகாரத்தின் பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் மீளுருவாக்கப் பாகங்களைக் கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார்கள். பாடசாலையில் அவர் ஐன்ஸ்டைன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை. ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, அறிவியல் பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித ஆசிரியரால் உந்தப்பட்டு, பல்கலைக்கழகத்தில் கணிதத்தைத் தெரிவு செய்தார். அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் மருத்துவத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டும் என்றும் விரும்பினார்.
அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் இயற்பியலையும், வேதியியலையும் தெரிவு செய்தார். மார்ச் 1959ல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959ல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார். முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது. அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, அறிவியல் புனைவு போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார். அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது. அவர் ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படித்த 3 ஆண்டுகளில், தான் 1000 மணித்தியாலங்கள் படித்திருப்பதாகக் கணித்ததுடன், இதனால் தனக்கு இறுதிப் பரீட்சை, சவாலானதாக அமையும் என்றும் கணித்து, தான் நிகழ்வுசார் அறிவைவிட, கோட்பாட்டு இயற்பியல் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரும்பியவாறு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில், அண்டவியல் துறையில் பட்டப் படிப்பைத் தொடர வேண்டுமெனின், அதற்கு முதலாம் பிரிவில் நன்மதிப்பு பெற்றிருக்க வேண்டும்.
ஹாக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த பெரு வெடிப்புக் கோட்பாடு(Steady State) போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன. உரோசர் பென்ரோசு என்பவரின் கருந்துளையின் மையத்திலுள்ள, வெளிநேர சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965ல் எழுதினார். அந்தக் கட்டுரை 1966ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார். பின்னர், மார்ச் 1966ல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, ‘மேலிருந்து-கீழான அண்டவியல்’ கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், துல்லிய ஒத்தியைவு பேரண்டம் (Fine-tuned Universe) என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது.
2003 ஆம் ஆண்டளவில், கருந்துளைத் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது.2004ல் டப்லின் செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997ல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடவியலைக் கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார். 2005ல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார். 2014ல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார்.
ஹாக்கிங் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார். ஹாக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார்.
ஹாக்கிங் காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன. 21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கருந்துளைகளின் கதிர்வீச்சு ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்ற ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் மார்ச் 14, 2018ல் தனது 76வது அகவையில் கேம்பிரிட்ச், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி…