• Wed. Oct 4th, 2023

மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று..!

Byகாயத்ரி

Feb 1, 2022

தமிழறிஞர் உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815-இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை -அன்னத்தாச்சி ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமை பெற்றார். அற நூல்கள், காப்பியங்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டிக் ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார். இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876-இல் தன் 61-ஆவது வயதில் மறைந்தார்.இத்தகைய எழுச்சி மிகுந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *