• Thu. Apr 25th, 2024

கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Byகுமார்

Mar 18, 2022

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது . பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் திருமாலிருஞ்சோலை. தென் திருப்பதி என்று போற்றப்படும் மதுரை கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் தனி சிறப்புடையது ஆகும். அந்த வகையில் கடந்த 15 – ந் தேதி பங்குனி பெருவிழா தொடங்கியதையடுத்து தினமும் கள்ளழகர் ஸ்ரீதேவி – பூமிதேவி தாயார்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி கோயிலுக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது . முன்னதாக சுந்தரராஜா பெருமாள் புறப்பாடாகி , தோளுக்கினியனில் அலங்காரமாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சகல பரிவாரங்களுடன் ஆஸ்தானத்தைவிட்டு தொடர்ந்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட சுந்தரராஜா பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீகல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களுடனும் ஸ்ரீபெரியாழ்வார் முன்னிலையில் திருக்கல்யாண வைபவமும் தொடர்ந்து விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.

கள்ளழகர் பெருமாள் திருமணத்தின்போது மட்டுமே ஆறு மூர்த்திகளையும் ஒரே இடத்தில் காணமுடியும் என்பதாலும் கொரோன நோய் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் திருக்கல்யாண வைபத்தை நேரில் காண முடியாததாலும் பக்தர்கள் ஏராளமானோர் இன்று அழகர்கோவிலுக்கு வந்திருந்து திருக்கல்யாண வைபத்தை தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவம் இன்று நிறைவுபெற்றதை தொடர்ந்து 5 – ம் திருநாளாக நாளை காலையில் சுவாமிக்கும், தேவியர்களுக்கும் திருமஞ்சனமும், மாலையில் மஞ்சள் நீர்சாற்று முறையும் நடததப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *