மதுரையில் மிகப்பழமையான, பிரசித்தி பெற்ற திவ்ய தேச ஸ்தலங்களில் ஒன்று கூடலழகர் பெருமாள் கோயில். பெரியாழ்வாரால் பாடல் பெற்ற கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம், பங்குனி உத்திர உத்சவம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரவல்லித்தாயார் சன்னதியில் சுந்தர் ராஜப்பெருமாள் மதுரவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. வைணவர்கள் மங்கல நாணை தேவியர்களுக்கு அணிவிக்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.