தூத்துக்குடி திமுகவில் பெரிதும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் என்.பெரியசாமி. இவர் கருணாநிதியின் ‘முரட்டு பக்தர்’ என்று புகழப்பட்டவர். என்.பெரியசாமியை தொடர்ந்து மகள் கீதா ஜீவன், மகன் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அடுத்த தலைமுறை திமுகவினர்களாக திகழ்ந்து வருகின்றனர். இதில் கீதா ஜீவன் ஒருபடி மேலே உயர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மறுபுறம் ஜெகன் பெரியசாமிக்கு பெரிய அளவில் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி வெற்றி பெற்றார். இதனால் தூத்துக்குடி திமுகவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு போட்டியாக பலம் வாய்ந்த புள்ளிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கீதா ஜீவன் மற்றும் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாறியுள்ளனர். இது திமுக உடன்பிறப்புகள் மத்தியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஓரங்கட்டப்பட்ட கனிமொழி, தனது செல்வாக்கை ஏதேனும் ஒருவகையில் நிரூபிக்க போராடி வருகிறார்.
சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலினின் அரசியல் ஆட்டத்தை தூத்துக்குடியில் முடக்கும் வகையில் திமுகவின் செயல்பாடுகளை தனது தலைமையில் ஒன்றுபட்ட நிலையில் கனிமொழி நகர்த்தி சென்றார். இந்நிலையில் அதிமுகவிற்கு பதிலடியாக ஒரு விஷயத்தை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அரங்கேற்றியுள்ளார். அதாவது, தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு எதிராக அதிமுக நடத்திய போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
ஒரு மால் கொண்டுவர முதல்வர் துபாய் போக வேண்டுமா? அரசு முறை பயணமா? குடும்ப பயணமா? என்று கேள்வி எழுப்பினார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக மேயர் ஜெகன் பார்வையிடும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியிலேயே செய்து முடிக்கப்பட்டவை என்று விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, வழக்கறிஞர் சேகர் கொஞ்சம் ஓவராக தான் பேசியுள்ளார்.
இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் இப்படித்தான் பேசினார். அவர் தற்போது காய்காறி வியாபாரம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார். இதே இடத்தை பிடிக்க சேகரும் முயற்சிப்பதாக தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் ஓவராக பேசாதீர்கள்.
எனக்கு சட்டம் தெரியும். அப்புறம் நடப்பதே வேறு என்று அதிரடியாக பேசியுள்ளார். இத்தகைய வார்த்தை மோதல்களால் தூத்துக்குடி அரசியல் அனல்பறக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே உட்கட்சி பூசலால் திமுக தவித்து வருவதாக குற்றம்சாட்டு நிலவுகிரது. இதனை ஓரங்கட்டும் வகையில் திமுக எள அதிமுக இடையிலான மோதல் போக்கு பேசுபொருளாக மாறியிருக்கிறது.