“நான் பிறந்த தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே உழைப்பேன் என்று ஆந்திரப் பிரதேசத்தில் அமைச்சராகப் பதவியேற்ற ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடைய அமைச்சரவையில் சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரோஜா அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை மனதில் கொண்டு அமைச்சரவையை மாற்றியமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் அண்மையில் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கும் இடம் கிடைத்தது. ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. அந்தத் துறையின் அமைச்சராக ரோஜா முறைப்படி பதவியும் ஏற்றுக்கொண்டுவிட்டார். இந்நிலையில் அமைச்சரான பிறகு ரோஜா இன்று தமிழகத்துக்கு முதன் முறையாக வந்தார். காஞ்சிபுரத்துக்கு வந்த அமைச்சர் ரோஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரோஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆந்திர மாநில அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் அமைச்சராக வேண்டும் என்று ஏராளமானோர் விரும்பினார்கள். நான் பிறந்த தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே உழைப்பேன்” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
