இந்தி எதிர்ப்பில் தி.மு.க.பகல்வேஷம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துக்களை மொழிபெயர்த்து இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து விமர்சனங்களையும், கேள்விகளையும் எதிர்கட்சியினர் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என, இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா . தமிழ்நாட்டில் அதற்கு நேர்மாறான சூழ்நிலை இன்று நிலவுகிறது.
மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா , ‘ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி பொழியைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறியதாக செய்திகள் வந்தன. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பிற மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்” என்று விமர்சித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக தற்போது தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில் வெளியிடுகின்றார் .
தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வடமாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் தி.மு.க.வால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது. ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்!
தி.மு.க. அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தி.மு.க.வின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாசியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அர வழிவகுக்கும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.