


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில் பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். சந்திர சாப விமோசன தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 9-ஆம்நாள் விழாவான திருத்தேரோட்டம் இன்று தப்பாட்டத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமளரெங்கநாதர் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன், நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

