


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் சிவன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது.

இதேபோல் மன்னம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மகாகாளியம்மன் ஆலயத்தின் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து , பக்தர் ஒருவர் 20 அடி நீள சூலத்தை அலகு குத்திய படி காவடி எடுத்து வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

