• Thu. Jun 8th, 2023

என்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்துகிறது-ராகுல் காந்தி

Byகாயத்ரி

Jan 27, 2022

தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆவேசம். மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தான் இப்படி நடந்துள்ளது என குற்றச்சாட்டு.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் கூறியதாவது:-ட்விட்டரில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சம் என இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் மாறி இருக்கிறது. என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அப்படியே மாறாமல் நிற்கிறது. இதை தற்செயல் என விட முடியாது. டெல்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து தான் இந்த பிரச்சனை தொடங்கியது. வேளாண் சட்டம் குறித்து நான் பதிவிட்ட வீடியோ ஒன்று அதிக பார்வைகளை பெற்றிருந்தபோதும் நீக்கப்பட்டது. ட்விட்டர் இந்தியாவில் வேலை செய்யும் என் நண்பர்கள் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர். என் கணக்கு கூட சில நாட்கள் முடக்கப்பட்டிருந்தது. இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டர் தளத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. ஒருபோதும் ட்விட்டர் தளம் தன்னிச்சையாக செயல்படாது. பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரணம் தான் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *