புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் கால பூஜையில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநில மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர். புதுச்சேரி மட்டுமல்லாது காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது பேராதரவை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தங்களது கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல, வரவிருக்கும் ஐந்து ஆண்டுகால ஆட்சியிலும் புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் தங்களது அரசு மிகச் சிறந்த ஆட்சியை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

மேலும், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு பாரதப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். காரைக்கால் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகப்படியான இடங்களை வழங்கி, சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கிக் கொடுத்த காரைக்கால் மக்களுக்கு அவர் தனது சிறப்பு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
காரைக்கால் பகுதியில் பா.ஜ.க முதன்முறையாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளதால், அப்பகுதிக்கு அமைச்சர் பதவியில் முக்கியத்துவம் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது குறித்து பா.ஜ.க மேலிடம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சருடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த நல்ல முடிவு மிக விரைவில் அறிவிக்கப்படும்” என்று அவர் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கொத்தளம் தெரு பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார் அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து சால்வை நிறுத்து மரியாதை செலுத்தினார். இதில் பாஜக புதுச்சேரி மற்றும் கேரள சிறுபான்மை அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விக்டர் ராயப்பசாமி உள்ளிட்ட ஏராளமானஊர் மக்கள் கலந்து கொண்டனர்.





