

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிகளை கொண்டாடிவருகிறது! கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் சிகப்பு நிற மாருதி காரில் வந்து வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின..
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி தேர்தல்களை சந்தித்து வருகின்றனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளனர். மேலும், பல இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்து அசத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், பலர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி திமுக கோட்டையாக உள்ள நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி விட்டு சென்னையில் திமுகவுக்கு சரியான போட்டியாக விஜய் மக்கள் இயக்கம் அமைந்துள்ளது. திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் 7222 வாக்குகளுடன் வெற்றி பெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அறிவு செல்வி 5112 வாகுகளை பெற்று 2வது இடம் பிடித்துள்ளார்.
இதில், அறிவு செல்வியின் கணவர் குணசேகரன் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர். கே கே நகர் பகுதியில் ஸ்டார் குணசேகரன் என அறியப்பட்ட இவருக்கு அந்த பகுதியில் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. விருகை என் ரவியுடன் மோதல் போக்கு ஏற்பட்டதால் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே சுயேச்சையாக ஸ்டார் குணசேகரன் போட்டியிட்டார். அறிவுச் செல்வி பெற்ற ஓட்டு விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த ஓட்டு அல்ல. குணசேகரனின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு கிடைத்த வாக்குகள் என அதிமுகவினர் கருத்து தெரிவித்து வெறும் 1137 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவிய நிலையில் புலம்பி வருகின்றனர்.
