தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது . முதல் கட்டமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டி தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் முரளிதரன் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அப்போது 18 வார்டுகளின் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமாக உள்ள தபால் வாக்குகளை 18 வார்டுகளுக்கும் தனித்தனியாக பிரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்தவுடன் வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . வாக்கு எண்ணிக்கை பணிகளை ஆண்டிபட்டி பேரூராட்சி தேர்தல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.