



புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று அதிகாலை கோயில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை துணியில் மூட்டையாக கட்டி அள்ளி சென்றுள்ளனர்.
இது குறித்து ஆலய நிர்வாகிகள் காலையில் கோவிலுக்கு வரும்பொழுது உண்டியல் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சியில் கோவில் உள்ளே வரும் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அவர்கள் கொண்டு வந்த துணியில் உண்டியல் பணத்தை மூட்டையாக கட்டி அள்ளி சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உண்டியலை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

