• Sat. Mar 22nd, 2025

66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நிறைவு!

ByP.Kavitha Kumar

Feb 27, 2025

66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த கும்பமேளா 2169-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா என்பதால் கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2ஆயிரத்து 100 கோடியும், உத்தரப் பிரதேச மாநில அரசு ரூ.7ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கீடு செய்தது.

இதற்காக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது. நேற்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், கும்பமேளாவில் புனித நீராடுவோர் எண்ணிக்கை 45 கோடியை எட்டும் என எண்ணியிருந்த நிலையில், 66 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது என்றார்.

இந்த கும்பமேளாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், உள்பட பல்வேறு பிரபலங்கள் புனித நீராடினர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி அடுதது 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.