மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 8 பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சமயங்களில் ஓய்வு எடுக்க நிழற் குடைகள் இல்லாத நிலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டது

குறிப்பாக கடந்த காலங்களில் சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற எம்பி எம்எல்ஏக்கள் தாங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது தங்களை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சோழவந்தானில் முக்கிய பகுதிகளில் பயணிகளுக்கான நிழற்குடைகள் அமைத்து தரப்படும் என தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து சென்றனர்.
ஆனால் வெற்றி பெற்ற பின்பு நிழற் குடைகள் அமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவில்லை.
முக்கியமாக சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேப்பமர ஸ்டாப் போன்ற பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் நிழற்குடைகள் அமைத்து தர தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும்,

சோழவந்தான் பேரூராட்சிநிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது மேலும் சோழவந்தானின் மையப் பகுதியான ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலாவது நிழற்குடைகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் பயணிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் நிழற் குடைகள் அமைக்க இடம் இல்லாததால் அமைக்க முடியவில்லை என சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கடைகள் வைப்பவர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தினசரி வாடகை செலுத்தி விட்டு கடைகள் வைப்பது ஆண்டு தோறும் நடைபெற்று வரும் வழக்கமாக கூறப்படுகிறது.
இதில் வேதனை தரும் நிகழ்ச்சியாக ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தனியார் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்குடைகள் அமைக்க இடம் இல்லை என்று கூறிவந்த பேரூராட்சி நிர்வாகம் தற்போது திருவிழாவிற்காக பொம்மை கடை வைப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது.

சொற்ப வாடகை அதாவது 17 நாட்களுக்கு 3 ஆயிரம் முதல் 5000 ரூபாய் வரை மட்டுமே வரக்கூடிய வாடகைக்காக பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்தில் பொம்மை கடை வைப்பதற்கு அனுமதி அளித்துள்ள பேரூராட்சி நிர்வாகம் கடந்த 5ஆண்டுகளாக நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை விடுத்த பொதுமக்களின் வேண்டுகோளை கண்டுகொள்ளாதது வேதனையின் உச்சமாக இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் தோல்வி அடைந்து தற்போது தோல்விக்கான காரணத்தை கூறி வருவதாக பயணிகள் பொதுமக்கள் கூறுகின்றனர். இனிவரும் காலங்களிலாவது வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




