கடந்த சில நாட்களாக தென்மேற்கு டெல்லியின் துவாரகா மற்றும் சுற்று பகுதிகளில் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய கவலையாக வெளிப்பட்டது.
டெல்லி மற்றும் அண்டை மாநிலமான அரியானா குர்கானில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதியப்பட்டன. பைக்கில் வரும் திருடர்கள் அப்பகுதியில் உள்ள பெண்களை குறிவைத்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிப்பதை தொழிலாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட கொள்ளையர்களில் ஒருவரை ‘அர்மான்’ என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரை கையும் களவுமாக பிடிக்க, டெல்லி காவல்துறை ‘ஹம் பீ ஹைன்’ என்ற திட்டத்தை மேற்கொண்டது.
மேலும், திருடனைப் பிடிக்கும் பொறுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் சிங் எனும் ஒரு பெண் காவலரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அர்மான் சனிக்கிழமையன்று துவாரகாவின் செக்டார் 13-ல் இருப்பார் என்ற தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் சிங்கிடம் கனமான தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டு அக்கம் பக்கத்தில் உலா வரச் சொன்னார்கள். மற்ற குழுவினர் மறைந்தனர்.
அர்மான், தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது சரோஜ் சிங்கிடம் நெருங்கியதும், அவர் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க மறைந்திருந்த போலீசார் வெளியே வந்தனர்.அப்போது குற்றம் அர்மான் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார். அந்த நேரத்தில், சரோஜ் சிங் தனது கைத்துப்பாக்கியை எடுத்து, திருடனின் காலில் சுட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார் என காவல்துறை அதிகாரி சங்கர் சவுத்ரி கூறினார்.
22 வயதான அர்மான் வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வசிக்கிறார், மேலும் அவர் மீது அண்டை மாநிலமான அரியானா குர்கானில் 25 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் துவாரகா மாவட்டத்தில் 36 திருட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.