மாவட்ட ஆட்சியரே சக்கர நாற்காலியில் அமர வைத்து தரைத்தளம் வரை கூட்டிவந்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கத்தின் மகன் வரதராஜன். தோற்றத்தில் சிறுவன் போல் காட்சியளிக்கும் வரதராஜனுக்கு வயது 22. கை கால்கள் 100 சதவிகிதம் ஊனமுற்ற நிலையில் குடும்ப வறுமை காரணமாக உதவிகோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தந்தையுடன் வந்திருந்தார். மக்கள் குறைதீர்க்கு நாள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கிய நிலையில் மாற்றுதிறனாளிகளை நேரில் சென்று சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வரதராஜனின் நிலை குறித்து கருணையோடு கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, வரதராஜனின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 6400 மதிப்பிலான சிறப்பு சர்க்கர நாற்காலியை உடனடியாக வழங்கினார். அதோடு மட்டுமின்றி வரதராஜனை தானே தூக்கி சர்க்கர நாற்காலியில் அமர வைத்து, கூட்ட அரங்கிலிருந்து வாயில் வரை தள்ளிக்கொண்டு வந்தார் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம். அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தெ நம்பிக்கையூட்டிய ஆட்சியர் கார்மேகம் பின்னர் மாற்றுத்திறனாளி நலத்துறை வாகனத்தில் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மாற்றுதிறனாளி இளைஞரிடம் மனிதநேயத்துடன் கருணை காட்டிய சேலம் மாவட்ட ஆட்சியரின் செயல் வரதராஜன் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்செய்தது.