• Sat. Apr 20th, 2024

35 வருடங்கள் காத்திருந்து 65 வயதில் காதலி கரம்பிடித்த காதலர்

Byமதி

Dec 4, 2021

35 வருடங்கள் காத்திருந்து தனது காதலியை 65 வயதில் கரம்பிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிக்கண்ணா.

“சூரியன் குளிர்ந்துபோகும்வரை… நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னை காதலிப்பேன்” – என்று காதலிக்காதவர்களையும் காதலில் விழும்படி எழுதிவைத்தார் ஷேக்ஸ்பியர். அவரின் வரிகளுக்கு உயிர் கொடுப்பதுபோல தனது காதலியை முதுமையடையும்வரை 35 ஆண்டுகள் காத்திருந்து கரம் பிடித்துள்ள சிக்கண்ணாவின் கதை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும் மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், ஜெயம்மாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர், அவரது குடும்பத்தினர். பெற்றோர் பார்த்து வைத்த திருமணமும் ஜெயிக்காமல் போகும் என்பதற்கு உதாரணமாய் ஜெயம்மாவின் குழந்தையின்மையைக் காரணம் காட்டி அவரது 30 வயதில் கணவர் பிரிந்து சென்றுள்ளார்.

ஆனால், அதன்பிறகும் ஜெயம்மா மீது அதே அன்போடும் காதலோடும் சென்று காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ள விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் சிக்கண்ணா. சமூகத்தின் ஏச்சல் பேச்சுகளுக்கு பயந்த ஜெயம்மாவோ இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும், சிக்கண்ணா திருமணம் செய்தால் ஜெயம்மாவைத்தான் செய்வேன் என்று கடந்த 35 ஆண்டுகளாக ஜெயம்மாவையே நினைத்து காதலுடன் காலத்தை கடத்தியுள்ளார்.

இதனால், வேதனையடைந்த உறவினர்கள் பலரும் எடுத்துச்சொல்லி தற்போதுதான் ஜெயம்மாவை சிக்கண்ணாவின் காதலுக்கு ‘ஜெயம்’ சொல்ல வைத்துள்ளனர். காத்திருந்த காதல் கைக்கூடிய மகழ்ச்சியில் உடனடியாக ஜெயம்மாவை திருமணம் செய்துள்ளார் சிக்கண்ணா. இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் மாண்டியா மேல்கோட்டையில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 65 வயதில் சிக்கண்ணா – ஜெயம்மா தம்பதிகளை மாலை கழுத்துடன் பார்ப்பது கொள்ளை அழகாக இருக்கிறது.

இவர்களின் திருமண வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துகளை குவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *