• Wed. Mar 29th, 2023

நான் அப்படித்தான் பணத்தை மூட்டை மூட்டையாக வாங்குவேன்..,
விருதுநகர் புவியியல் துறை செல்வசேகரின் அடாவடி!
நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..?

“எனக்கு மண்ணை பொன்னாக்காவும் தெரியும். கல்லை பணமாக்காவும் தெரியும். நான் சொல்வதுதான் சட்டம். அதுதான் நீதி. முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய்யுங்க” என்று விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் அலுவலர்களை மிரட்டி தனி ராஜ்யத்தை நடத்தி பண மூட்டைகளை துணை இயக்குநர் குவித்து கொண்டு இருக்கிறார். இதை பற்றி உங்கள் டிஜிட்டல் பத்திரிகையில் எழுத மாட்டீங்களா? ஏன் இப்படி கேட்கிறீங்க அதெல்லாம் தப்பிருந்தா தராளமா பதிவிடுவோம் என்று உடனே விருதுநகரில் ஆஜரானோம்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறையில சொல்லவா வேணும்; பணம் காசெல்லாம் எப்படி புழங்கும் உங்களுக்கு தெரியும்ல. எங்க அலுவலகத்தில் எல்லாமே விதிமீறல்கள் தான் என்று பேசத் தொடங்கிய அலுவலர்கள் சிலர் நம்மிடம்..,
எங்க அலுவலகத்தில துணை இயக்குநராக இருப்பவர் தான் செல்வசேகர்.

இவரைப்பற்றிதான் உங்ககிட்ட தெளிவா பேசப்போறோம். விருதுநகர் மாவட்டத்தில 126 கல்குவாரிகளும். 30 கிரானைட் குவாரிகளும் அரசிடம் இருந்து குத்தகை உரிமம் பெற்ற பிறகுதான் செயல்பட்டுகிட்டு இருக்கு. இது ஒருபக்கம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அவசரமாக அரசாணையை 2021 செப்;டம்பர் மாதம் அறிவித்தது. இந்த அரசாணையில் பட்டா நிலங்கள் வைத்திருக்கின்ற அனைத்து விவசாயிகளும், நிலங்களில் இருந்தும் விவசாய மேம்பாட்டிற்காக மண்ணை ஒன்னரை மீட்டர் ஆழத்திற்கு கைகளால் வெட்டியெடுத்து அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், மண் எடுக்கிறேன் என்ற பெயரில் கிராவல் மண்ணை எடுப்பதற்கு அனுமதி கொடுக்கிறாரு துணை இயக்குநர் செல்வசேகர். விவசாய நிலங்களில் மண் எடுப்பதற்கு முன்பு விவசாய மேம்பாட்டிற்கு மட்டுமே மண் எடுக்கிறோம் என்றும், அந்த மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வேளாண்மைத் துறையின் சான்றிதழ் பெற்ற பின்புதான் மண்ணை எடுத்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இது தவிர மண்ணை ஜேசிபி பொக்லைன் எந்திரம் கொண்டு அள்ளக்கூடாது என்று தெளிவாக அரசாணையில் பதிவு செய்திருந்தது.
ஆனால், இந்த அரசாணையை யாருமே மதிக்கவிடாம செஞ்சிட்டாரு செல்வசேகர். என்ன இப்படி சொல்றீங்க? என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்தோம். அதாங்க உண்ம. விவசாயிகள் பட்டா வைத்திருக்கின்ற விளைநிலங்கள்ல அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் மண்ணை எடுக்கணும்னு விதி இருந்தாலும் கூட போலியான விவசாயிகளை, அதுவும் குறிப்பா விவசாயியே அல்லாத பட்டா நிலங்களில் உள்ள மண்ணை சுரண்டி விக்கிறதுக்கு துணை போய்கிட்டு இருக்காரு. இதுதவிர, கிணற்றுக் கிராவலை அள்ளி அப்புறப்படுத்துவதற்கு ஒருவாரம், பத்துநாள், அனுமதி கொடுத்து விட்டு, மற்ற சுற்றி உள்ள கிராமங்களில் மண்ணை எடுக்க அனுமதி கொடுக்கிறாரு. இதுக்கு உறுதுணையா விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராயிருப்பு, ராஜபாளையம், சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் எல்லாம் இடைத்தரகர்களை இவரே நியமனம் செய்து அவர்கள் மூலமாக போலி விவசாயிகளிடம் இருந்து கிராவல், மண், மணல் அள்ளச் சொல்லி, அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வாங்கிறதுதான் இவரு வேலையே.

ஒரு கல்குவாரிக்கு 50ஆயிரத்துல இருந்து 1 லட்சம் வரைக்கும், 1 கிரானைட் குவாரிக்கு 3 லட்சத்துல இருந்து 5 லட்சம் வரைக்கும் லஞ்சப்பணமாக வாங்கி, எங்க துறை அமைச்சர் துரைமுருகன்கிட்ட கப்பம் கட்டிக்கிட்டு இருக்கேன்னு அவரே சொல்றாரு. இந்த மாதிரி தவறுகளை ஏற்கெனவே வேலை செய்த மாவட்டமான நாகர்கோயில், தேனி ஆகிய ஊர்களிலும் விதிமீறல்கள செஞ்சதால இவருமேல விஜிலன்ஸ் வழக்கே பதிவு செஞ்சிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன்.

இப்படியெல்லாம் உங்க மேல குற்றச்சாட்டு இருக்குன்னு நாங்க பலமுறை சொல்லியும் அவரு கேக்கல. “எனக்கு மண்ணை பொன்னாக்காவும் தெரியும். கல்லை பணமாக்காவும் தெரியும். நான் சொல்வதுதான் சட்டம். அதுதான் நீதி முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிஷன் எனக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய்யுங்க”ன்னு கூட வேலை பார்க்கிற எங்களையே மிரட்டுறாருன்னா பார்த்துக்கங்களேன். இது சம்மந்தமாக சில சங்கங்கள், செல்வசேகரைப்பற்றி எங்க துறை அமைச்சர்கிட்டயும், ஏன் முதலமைச்சருக்கு கூட புகார் அனுப்பிக்கிட்டுதான் இருக்காங்க என்றதோடு மட்டுமல்லாமல், செல்வசேகரை வேறு எந்த மாவட்டத்துலயும் பணி அமர்த்தாம சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்துல பணி அமர்த்துனா லஞ்சமே வாங்க முடியாது என்றனர் வேதனையோடு.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் செல்வசேகரை தொடர்பு கொண்டு பேசினோம்..,
ஆபஸ்ல எனக்கு பிடிக்காதவங்க நிறைய பேரு இருப்பாங்க. அவங்கதான் உங்ககிட்ட புகார் சொல்லியிருக்காங்க. நீங்க நேருல வாங்க நிறைய பேசுவோம் என்று படபடப்போடு போனைத் துண்டித்தார் செல்வசேகர்.
மேலும் இக்;குற்றச்சாட்டுகள் குறித்து விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ் நம்மிடம்..,


துணை இயக்குநர் செல்வசேகர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது உண்மைதான். அவருக்கு மேல இருக்கிற மண்டல இணை இயக்குநர் சரவணன் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று விசாரித்து விட்டு, துணை இயக்குநர் செல்வசேகர் கையாடல் செய்திருப்பது உண்மைதான் என்று எங்களிடம் அறிக்கையாகவே கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக துணை இயக்குநர் மீது நடவடிக்கை உறுதி என்றார் பொறுப்பாக.
எது எப்படியோ, ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகத்தை மறந்திருக்கிறது அரசு அலுவலகங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *