சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இரவுசேரி கிராமத்தில் புகழ்வாய்ந்த ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திலேயே பத்திரகாளி அம்மன் சிலையும் உள்ளது. தேவகோட்டை, இரவுசேரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வருவதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
இந்நிலையில்,நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை சாத்தி விட்டு, இன்று காலை வழக்கம் போல் பூஜைக்காக கோவிலை திறக்க நிர்வாகிகள் வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு,
அம்மன் கழுத்தில் கிடந்த 12 கிராம் சவரன் நகை, ஒரு வெள்ளி வேல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தேவகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், சம்பவ இடம் வந்த போலீசார், கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்திற்குள் தேவகோட்டை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள நான்கிற்கு மேற்பட்ட கோவில்களை குறி வைத்து திருட்டு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.