சேலம் மாவட்டம் வாழப்பாடி வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள், இலக்கியா மற்றும் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த புகார் மனுவில் வாழப்பாடி பகுதியில் நிதி நிறுவனத்தின் கடன் தொகை முப்பதாயிரம் பெற்று மாதம் மாதம் கடன் கட்டி வந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு கட்டிய தொகைக்கான ரசீது நிதி நிறுவனம் தராமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பிரசாந்த், சந்தானம் மற்றும் ரமேஷ் மூன்று பேர் வந்து கடந்த 3 மாத பணம் கட்டவில்லை என்று கூறி கடன் தொகையை கேட்டுள்ளனர். அப்போது மூன்று மாதத்திற்கான கடன் தொகை செலுத்தி விட்டதாகவும் அதற்கான ரசீது தராமல் உள்ளீர்கள் என்று இலக்கியா தெரிவித்த நிலையில் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது
இதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் வந்து உருட்டுக்கட்டையால் எனது கணவர் அருண் மீதும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அருண் படுகாயமடைந்து கை முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பெற்று வருவதாக புகார் மனுவில் தெரிவித்து இருந்தனர். மேலும் எனது அக்காவையும் அடித்து கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலக்கியா கூறும்போது, கடன் தொகை ரசீது கேட்டதற்கு தகாத வார்த்தையில் என்னை பேசி கணவரை அடித்து அக்காவையும் அடித்து நகையை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்திய நிதிநிறுவன ஊழியர் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கடன் தொகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு