
மோடி ஆட்சியில் வாழும் போதும் வரி, இறந்தாலும் வரி என மனிதத் தன்மையற்ற வரிக் கொள்கை பின்பற்றப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மத்திய அரசை விமர்சித்துள்ளார். சிபிஎம் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் சத்தி யமூர்த்தி நகரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பிரகாஷ்காரத் பேசும்போது….
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும் ஜிஎஸ்டி, கேன்சல் செய்தாலும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது. அதேபோல் ஒருவர் இறந்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றால் அந்த கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி வரி. இதற்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு வந்தவுடன், நிதியமைச்சர் மக்களவையில் உடலை புதைக்கும் அல்லது எரிக்கும் கட்டணத்தின் மீது ஜிஎஸ்டி வரி கிடையாது; ஆனால் புதிய சுடுகாடு, இடுகாடு உருவாக்கப்பட்டால் அந்த கட்டணத்தின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். வாழும் போது நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் மீது வரி, இறப்பிற்குப் பிறகு சுடுகாடு, இடுகாடு கட்டணத்திற்கு வரி. வாழும் போதும் ஜிஎஸ்டி, இறந்த பிறகும் ஜிஎஸ்டி. இது மனிதத்தன்மையற்ற மிகக் கொடுமையான வரிக் கொள்கை என்று கூறினார்.

