• Fri. Apr 19th, 2024

தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிப்பு

Byமதி

Dec 17, 2021

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப் பாடும் போது இனி அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த” பாடல் பாடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1913 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் சங்கத்தில் நீராருங் கடலுடுத்த என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு 1914ஆம் ஆண்டு முதல் கரந்தை தமிழ் சங்கத்தில் இந்த பாடலை பாடி வந்துள்ளார்கள். அதை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி இனி வரும் அரசு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நிச்சயம் இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்னும் நூலில் “தமிழ் தெய்வ வணக்கம் ” என்ற தொகுப்பின் கீழ் உள்ள ஒரு பகுதியை நாம் தமிழ் தாய் வாழ்த்தாக பாடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *