தேனியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 48 வயது போலி சாமியாரை மரபணு சோதனைப்படி தேனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவதானப் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பெரியகுளம் அருகே டி.கள்ளிப் பட்டியை சேர்ந்த வல்லரசு பாண்டியனை போக்சோவில் தேனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் கைது செய்தார். நீதிமன்றத்தில் “நான் சிறுமியுடன் பழகியது உண்மை. ஆனால், எந்த தவறும் செய்யவில்லை. பிறந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை. இதை நிரூபிக்க டி.என்.ஏ., மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில் வல்லரசு பாண்டியன், சிறுமி மற்றும் சிறுமியின் ரத்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் வல்லரசுபாண்டியனுக்கு இதில் எந்த தொடர்பு இல்லை என தெரியவந்தது.
மீண்டும் போலீசார் விசாரணையில் சிறுமியுடன் நெருக்கமாக பழகிய சாமியார் மீது சந்தேகம் எழுந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி சாமியாருக்கு டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த முடிவுகளின்படி போலி சாமியாராக உலா வந்த 48 வயது ஆசாமியை போலீசார் கைது செய்து பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்.