ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி தூப்பாக்கி சூடு,ஸ்மார்ட் சிட்டி முறைகேடு அறிக்கை அடுத்த மாதம் கூடும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. தீபாவளிக்கு முன்னதாக 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தை 5 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறிக்கையின் முழு விவரங்களும் இப்போது கூடும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை வெளியிடப்படும் போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? இல்லையா? என்பது தெளிவாக புரிந்து விடும். அது மட்டுமின்றி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் வெளியாக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை போன்ற அவசர சட்டங்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தின் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே இருக்கையில் இடம் ஒதுக்கப்படுமா? அல்லது வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்ற விவரங்கள் அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் தெரிந்து விடும். இதனால் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது… 3 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு
