• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தமிழர் அடையாளங்களை இழிவுபடுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ள பெ.மணியரசன் எச்சரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jun 3, 2026

தமிழர்களின் அடையாளங்களை, தெய்வங்களை, மன்னர்களை இழிவுபடுத்தும் போக்கை திராவிடர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். சமணர் கழுவேற்றம் குறித்து பாண்டிய மன்னன் என்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் ஊனத்தைக் குறிப்பிட்டு இழிவு படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன் எச்சரிக்கை.

தெய்வத்தமிழ் பேரவையின் சார்பாக அதன் தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் இன்று தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளரான பெ.மணியரசன், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்நிலையில் அரசியல் டுடே வார இதழுக்கு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழர் ஆன்மீக உரிமைகளை மீட்பதற்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது தெய்வத்தமிழ் பேரவை. தெய்வத் தமிழ் பேரவையின் தலைமை செயற்குழு கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. ஆன்மீகப் பெருமக்கள் மற்றும் அமைப்பு சார்ந்த முக்கிய நபர்கள் இதில் கலந்து கொண்டனர். தெய்வத் தமிழ் பேரவையின் நோக்கம் தமிழ் வழியில் தமிழகத்தில் வழிபாடுகள் அனைத்தும் நடைபெற வேண்டும். தகுதியுள்ள அனைத்து ஜாதியினரும் தமிழ்நாட்டு கோவில்களில் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதன்மையான கோரிக்கை. அதைத்தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு

வருகின்ற செப்டம்பர் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்கள். தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் வழியில் தான் அனைத்தும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இதற்கு உயர்நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரை அமர்வுதான் இந்த பிரச்சனையில் உத்தரவுகளை வழங்கி உள்ளது.

நீதிபதியின் முத்தான தீர்ப்பு

அண்மையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பு மிக முக்கியமானது.

நீதிபதி பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை விசாரித்து மிக அருமையான தீர்ப்பை வழங்கினார். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றமும் மதுரை அமரும் இதுகுறித்த வழக்குகளில் தமிழ் பாதி சமஸ்கிருதம் பாதி என திருக்குடமுழுக்கை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளன. இந்த தீர்ப்புகளை பரத சக்கரவர்த்தி உறுதி செய்து, மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் தான் சங்கப் பலகை இருந்து தமிழ் காப்பியங்கள் எல்லாம் இயற்றப்பட்டன. அப்படிப்பட்ட மதுரையில் தமிழை புறக்கணிக்கலாமா என்பதை சுட்டிக்காட்டி கட்டாயம் தமிழில் பாதி நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்டதோடு ஆங்கிலத்தில் வழங்க வேண்டிய தீர்ப்பினை தமிழில் வழங்கி முன்மாதிரியாக்கி உள்ளார்.

தமிழ் அர்ச்சகர்கள்

இதன் அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும். கருவறை, வேள்விச்சாலை, குறிப்பாக வேள்விச் சாலையில் 50 குண்டங்கள் இருந்தால் 25 குண்டங்கள் தமிழில் பிராமணர் அல்லாத தமிழ் அர்ச்சகர்களைக் கொண்டு தான் ஓதப்பட வேண்டும். இதற்கான போர்வை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் வழங்க உள்ளோம். தேவைப்பட்டால் இது குறித்து மதுரையில் போராட்டம் நடத்தவும் தீர்மானம் இயற்றியுள்ளோம்

சட்டமன்றத்தில் வழிபாட்டில் தமிழ் சட்டம்

கடந்த திமுக, அதிமுக அரசுகள் திட்டமிட்டு தமிழ் மறைப்பு, தமிழ் மறுப்பு வேலைகள் செய்து கோவில்களில் குடமுழுக்கு நிகழ்வினை நடத்தின.தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள விஜய் அரசு ஸ்டாலின் தமிழ் மறைப்பு பாதையை பின்பற்றாமல் உயர் நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுமாறு தெய்வத்தமிழ் பேரவையின் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

அடுத்ததாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ் வழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் அது குடமுழுக்காக இருந்தாலும் அல்லது சாதாரண வழிபாடாக இருந்தாலும் தமிழில் தான் இருக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ஏற்கனவே உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாதி சமஸ்கிருதம் பாதி என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். குறிப்பாக தமிழில் தான் நடைபெற வேண்டும். விரும்பி கேட்பவர்களுக்கு சமஸ்கிருதத்திலும் இதனை நடத்தலாம் என்ற அடிப்படையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

அனைத்து ஜாதி அர்ச்சகர்

அனைத்து ஜாதியினர் அர்ச்சராக வேண்டும் என்ற வழக்கை குறிப்பிட்ட சமூகத்தார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு சமாதானம் செய்து கொண்டது. ஆகமம் அல்லாத கோயில்களில் பிற ஜாதியினரையும் ஆகம கோவில்களில் பிராமணரையும் அமர்த்துவது என்ற அடிப்படையில் செய்யப்பட்ட முடிவை நாங்கள் தவறு என சுட்டிக்காட்டுகிறோம். கேரளாவில் இது போன்ற எந்த நடைமுறையும் கிடையாது. ஆகையால் இந்த வழக்கில் உள்ள தடைகளை எல்லாம் நீக்கி அனைத்து ஜாதியினரும் ஆகம கோவில்களிலும் அர்ச்சகராகலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட ஏற்பாடுகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் மீது வழக்கு

தமிழர்களுடைய ஆன்மீகத்தை தெய்வங்களை இழிவுபடுத்தும் போக்கு கண்டிக்கத்தக்கது. குறிப்பாக அண்மையில் ஆர் பாலகிருஷ்ணன் என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, தமிழர்கள் போற்றக்கூடிய வரலாற்றில் இடம்பெற்ற பாண்டிய மன்னன் நின்று சீர் நெடுமாறனை அவரது ஊனத்தின் அடிப்படையில் இழிவு செய்திருந்தார். அவருக்கு சமணம் உவப்பாக இருந்தால் அதனைத் தழுவிக் கொள்ள யாரும் இங்கு தடை இல்லை. சமண சமயம் பிறந்த இடத்திலேயே செல்வாக்கு இழந்து விட்டது. அங்கு எத்தனை பேர் சமண சமயத்தில் இருக்கிறார்கள்? புத்த மதமாவது தமிழ்நாட்டில் இல்லை என்றாலும் பிற நாடுகளில் வளர்ந்துள்ளது. பாலகிருஷ்ணனின் பூர்வீகம் எங்கு இருக்கிறதோ அங்கு போய் சமணத்தை வளர்ப்பதில் இங்கு யாரும் தடையாக இல்லை. தமிழர்கள் இதுபோன்று இழி செயல்களை எப்போதும் செய்ததில்லை. தமிழர்களின் தெய்வங்களை மன்னர்களை இழிவு படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. ஆர். பாலகிருஷ்ணன் மீது வழக்கு தொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவரை கைது செய்ய வேண்டும் என தெய்வத்தமிழ் பேரவை தீர்மானம் இயற்றியுள்ளது.

வடலூர் சத்திய ஞான சபை

வடலூர் வள்ளல் பெருமானுடைய சத்திய ஞான சபையின் பெருவெளியில் கட்டடங்களைக் கட்டி நிரப்ப போகிறேன் என ரூ.100 கோடி திட்டம் ஒன்றை ஸ்டாலின் உள்நோக்கத்தோடு அறிவித்திருந்தார். இதனை தெய்வத் தமிழ் பேரவையும், வள்ளலார் பணியகமும் எதிர்த்து போராடினோம். இதனை அடுத்து திட்டம் நிறுத்தப்பட்டாலும் குழி தோண்டியவாறு அப்படியே கிடக்கிறது. அந்த இடம் ஆன்மீகத்திற்கான ஒரு அங்கம். அந்த குழிகள் அனைத்தையும் உடனடியாக புதிய அரசு மூடி மீண்டும் சமவெளியாக்க வேண்டும். பெருவெளியை கட்டடங்கள் கட்டி பயன்படுத்தும் அந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். பெருவெளியை பெருவெளியாகவே விட்டுவிட வேண்டும்.