நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று (மே 1) தொடங்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும் நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில், நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் ஆக்கப் பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று (மே 1) முதல் 15ம் தேதி வரை இலவச நுண்கலை பயிற்சிகள் காலை 10மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடை பெறுகிறது.
இதில் தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகளை அரசு சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
முகாமில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஜூன் முதல் மார்ச் வரையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடை பெறும். ஆண்டு முழுவதும் பங்கேற்க ஆண்டு சந்தா செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.