லட்சக்கணக்காக சம்பாதிக்கும் ஐ.டி.துறையை ஒதுக்கி விட்டு, பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை அங்காடி நடத்துவது அனைவரையும் வியக்க வைக்கிறது.
நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் எம்.சி.ஏ பட்டதாரி விக்னேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் லட்சத்தில் சம்பளம் பெற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, தனது வேலையை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின்போது இனி வரும் நாட்களில் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவெடுத்தார். அதன்படி அத்தியாவசிய பொருட்களான சோப்பு, ஷாம்பு போன்றவை கூட இயற்கை பொருட்களை பயன்படுத்த துவங்கினார்.
அதுமட்டுமின்றி தனது தாய் தந்தையரையும் பயன்படுத்த வைத்தார். முகபூச்சு பவுடர், இயற்கை ஹேர் டை, சிறுதானிய உணவுகள், மரப்பொருட்கள் என அனைத்தையும் இயற்கை பொருட்களையும் பயன்படுத்த துவங்கினார். இவரை முதலில் ஆச்சரியமாக பார்த்த அவரது உறவினர்கள், பின்னர் சில நாட்களில் அவர்களும் இயற்கை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு மற்றும் குளியல் சோப்புகளை விக்னேஷிடம் வாங்க தொடங்கினர். நாளடைவில் இதனை ஏன் நாமே தொழிலாக தொடங்கக் கூடாது என எண்ணிய விக்னேஷ். அதன்படி தன்னிடம் உள்ள சிறிய தொகையை வைத்து தனது சொந்த ஊரான அக்கியம்பட்டியிலேயே சிறிய அளவிலான இயற்கை அங்காடியை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இயற்கை பொருட்களை வாங்க தொடங்கியதால் நாமக்கல்லில் பெரிய அளவில் கடையை தொடங்க ஆயத்தமானார். அதன்படி அக்கியம்பட்டியில் கிடைத்த லாபத்தை வைத்து கடந்த ஆண்டு நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலின் அருகே “பாலா இயற்கை அங்காடி” என்ற பெயரில் இயற்கை பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார்.
இந்த கடையில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு, சோப்பு, ஹேர் டை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், பழைமையான அரிசி வகைகள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள், வாழை நார் கொண்டு செய்யப்பட்ட கைவினை பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட கலன்கள், பாத்திரங்கள், பானைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இவரின் இந்த இயற்கை அங்காடி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.