மதுரையில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு…
மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன் (வயது14), ரோகித் 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல வந்த போது கூட்ட நெரிசலுடன் வந்த ஆரப்பாளையம் செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளார். குரு தியேட்டர் சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக மாணவன் பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.