• Sat. Apr 20th, 2024

*பெரியார் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் எஸ் ஆர் பார்த்திபன்*

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 75 லட்சம் மதிப்பிலான உற்பத்தி இயந்திரத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில் முனைவோர் அடைவு மையம் செயல்பட்டு வருகிறது. சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

பெரியார் பல்கலைக்கழக தொழில்முனைவோர் மையம் சார்பில் மேக் இன் தமிழ்நாடு தொடக்க விழா மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மாநாடு இன்று நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்துகொண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மாநாட்டினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலை தேடுபவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பை அளிப்பவர்களாக மாற்றும் வகையில் மேக் இன் தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை இளம் தொழில் முனைவோர் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பெரிய அளவிலான வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பெரியார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் அடைவு மையத்தில் 75 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .ஆர்.பார்த்திபன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *