• Fri. Mar 29th, 2024

தேனி: மார்ச் 3ல், சென்னையில் முற்றுகைப் போராட்டம்..

நியாய விலை கடை பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா தலைமை வகித்தார். பொதுச் செயலர் விஸ்வநாதன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூறியதாவது; நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டதைப் போல, நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்; பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட 5 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகத்தை, மார்ச் 3ல், நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் இருப்பதாக புகார் தெரிவிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் பொருட்களை அனுப்பும் கிடங்குகளுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை?….அங்கிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சமீபத்தில் செஞ்சி அருகே உள்ள நியாய விலைக் கடையில், தரமற்ற பொருட்கள் விநியோகித்ததாக விற்பனை பணியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இதை கண்டித்தும், ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்யக் கோரியும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் வரும் 16ல், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலர் சிவக்குமார், மாநில துணைத் தலைவர்கள் செல்லத்துரை, துரை. சேகர், ஏ.சி.சேகர், மாநில இணைச் செயலர்கள் பொன்.மதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *