வரையாடுகளின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு, மூணாறு ராஜமலை வனப்பகுதி சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாரும் இங்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மிகவும் அரியவகையாக கருதப்படும், வரையாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறை அதிகரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அவைகள் வசிப்பதற்கான தட்ப, வெட்ப சூழ்நிலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறில் மட்டுமே நிலவுகிறது. காடு, மேடு மற்றும் பள்ளத்தாக்கு மிகுந்த பகுதிகளில் ‘ஹாயாக’ சுற்றி வந்தாலும், புலி மற்றும் சிறுத்தை போன்ற காட்டு விலங்களின் பசிக்கு அவ்வப்போது இரையாகி வருவது வேதனையளிக்கிறது. கர்ப்ப காலங்களில் புல்வெளி மறைவுகளில் பிரசவித்தால் ஆபத்து வரும் என கருதி, புத்தி சாலித்தனமாக மலை சரிவில் உள்ள பள்ளத்தாக்கு இடுக்குகளில் பதுங்கி வரையாடுகள் குட்டியை ஈன்றெடுக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு ஈன்றெடுத்த குட்டிகளில், ஒரு சில மட்டுமே வன விலங்குகளிடமிருந்து தப்பி பிழைக்கும். இப்படி தினம்… தினம்…செத்துப் பிழைத்து வரும் வரையாடுகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு, அவைகளை கண்ணும், கருத்துமாக வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். நடப்பாண்டு வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி விட்டபடியால், முன்னதாகவே பெரும்பாலான வரையாடுகள் கர்ப்பமுற்ற நிலையில் காணப்படுகிறது. இதன் நலன் கருதி வனத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் ராஜமலை வனச் சாலையை அடைத்தனர். சுற்றுலா பயணிகள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; ஆண்டுதோறும் மார்ச் மாதம் வரையாடுகளின் இனப்பெருக்க காலமாகும். இதையொட்டி, 2 மாதங்கள் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. குட்டிகள் வசிப்பதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது, வனச் சாலை திறக்கப்படும். 800க்கும் மேற்பட்ட வரையாடுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.