• Sun. Jun 4th, 2023

சதிர் நடனம் ஆடும், தேவதாசி மரபின் கடைசி பெண்மணி முத்துக் கண்ணம்மாள்

பாரம்பர்ய நாட்டுப்புற கலைகளின் பிறப்பிடமாக தமிழகம் இருந்து வருகிறது இன்றளவும் அந்தக் கலைகள் அழிந்துவிடாமல், மறக்கடிக்கப்படாமல் இருக்க அந்த கலைகளை அறிந்தவர்கள் வறுமையில் இருந்தாலும் முயற்சி செய்து வருகின்றனர் பரதநாட்டியம் மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக இருந்து வருகிறது.

ஆனால் பரதநாட்டியத்தின் தொடக்க கலையாக கருதப்படும் சதிர் நடனம் அழிந்துவரும் நிலையில் அக்கலையை முழுவதுமாக அறிந்தவர் எழுபது ஆண்டுகாலமாக அதனை ஆடிவருபவர், புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களுக்கு சதிர் நடனத்தை கற்றுக் கொடுத்தவர் முத்துக் கண்ணம்மாள் சமகாலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே சதிர் நடனக்கலைஞர் தேவதாசி மரபின் கடைசி பெண் எனக் கருதப்படுபவர்பத்ம ஸ்ரீ விருது பெறும் முத்துக்கண்ணம்மாள்.


83 வயதில், முதுமை ஓய்வை கேட்டாலும், தன் காலத்திற்குள் சதிர் நடனத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, இன்றளவும் சதிர் நடனம் ஆடி வருகிறார் முத்துக்கண்ணம்மாள்.


ஜனவரி 25 அன்றுபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய காலத்தில் பொட்டுக்கட்டி கோயில்களில் கடவுள்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் தேவரடியார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்கள் கோயில்களில் கடவுள் வழிபாடு செய்து, திருவிழாக்களின்போது சதிர் எனும் தனித்துவமான நடனத்தை ஆடுவர்.


ஆனால், காலப்போக்கில் இந்த தேவரடியார்கள் சமூகத்தில் மேல்தட்டில் இருந்தவர்களால் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தேவரடியார்கள்முறைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.


பெரியார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி போன்றோர் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, 1947-ல், பெண்களைக் கோயிலுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் வகையில், சென்னை மாகாணத்தில் ‘தேவதாசி தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.
80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு
தன்னுடைய ஏழாவது வயதில் விராலிமலை சுப்பிரமணியசாமி கோயிலில் முருகக்கடவுளுக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்ட முத்துக்கண்ணம்மாள், ஆங்கிலேயர் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார். இன்று தேவரடியார் மரபின் கடைசி நபராக இருக்கிறார் முத்துக்கண்ணம்மாள்.


பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்வுடன், பல்வேறு தொலைக்காட்சி பேட்டிகள், தொலைபேசி அழைப்புகள், வாழ்த்துச் செய்திகளுக்கு நடுவில் பரபரப்பாக இருந்த முத்துக்கண்ணம்மாள் பத்திரிகையாளர்களிடம் பேசியது கூறியதில் இருந்து தொகுக்கப்பட்டவை.


“விராலிமலை தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பமே பரம்பரை பரம்பரையாக சதிராட்டம் ஆடும் குடும்பம் தான். எங்கள் தாத்தா, அப்பா, சித்தப்பா என எல்லோரும் நட்டுவனார் தான். என் அத்தை, சின்னம்மா என எங்கள் குடும்பத்தில் பலரும் சதிர் ஆடுவார்கள். விராலிமலையில் எங்கள் குடும்பம்தான் சதிர் ஆடும்.


நான் ஏழு வயதிலிருந்து சதிராட்டம் ஆடுகின்றேன். என் தகப்பனார் ராமச்சந்திரன்தான் எனக்கு அக்கலையைக் கற்றுக்கொடுத்தார். குடும்பத்தினர் அனைவருமே சதிர் நடனம் ஆடுவார்கள் என்பதால், அதைப் பார்த்தே எனக்கு அந்த கலை கைகூடிவிட்டது” என்கிறார் முத்துக்கண்ணம்மாள்.


காலை, மாலை என இருவேளையும், 200 படிகள் ஏறி, சுப்பிரமணியசாமியை வணங்கி, பாடல் பாடி, சதிர் நடனம் ஆடுவதே தன் இறைப்பணியாக கருதி வாழ்ந்துவரும் முத்துக்கண்ணம்மாள், சிறு வயதிலிருந்து சதிர் நடனம் ஆடிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.


“மகாராஜா காலத்தில் சுப்பிரமணியசாமி கோயிலில் என்னுடன் சேர்ந்து 32 பேர் பொட்டுக்கட்டி ஆடினர். அக்காலத்தில் எங்களுக்கு நல்ல சலுகைகள் வழங்கப்பட்டன. கஷ்டம் இல்லாமல் இருந்தோம். பெருமையாக நடத்தினார்கள்.
காலையில் 9 மணிக்கெல்லாம் கோயிலில் நாங்கள் 32 பேரும் பித்தளைத் தட்டுக்களை சுத்தம் செய்து, அந்த 32 தட்டுக்களிலும், அரைத்த மாவினால், ‘ஓம் சரவண பவ’ என எழுதுவோம். பின்னர், மாலையில் கடவுளுக்கு தீபாராதனை காட்டும்போது எங்கள் தகப்பனார் பாடுவார்” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘தனத்த தனத்தா…திமித்த திமித்தா…தா தை தையா” என பாடத்தொடங்கினார் முத்துக்கண்ணம்மாள்.
“பின்னர், நாங்கள் தீபாராதனையின்போது சதிர் நடனம் ஆடுவோம். அதன்பின், இரவு 8 மணிக்கு ஏகாந்தம் ஓதி கோயிலுக்குள்ளேயே ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியறைக்குள் கடவுளை வைப்பர்.


திருவிழா காலங்களில், சுப்பிரமணியசாமி கோயிலில் இருந்து சாமியை இறக்கிவந்து மண்டபத்தில் 10 நாட்கள் இருக்கும்போது, அந்த 10 நாட்களும் 2-4 பேராக சேர்ந்து சதிர் ஆடுவோம். கடவுளை ஊர்வலாக கொண்டு வரும்போது, கும்மி, கோலாட்டம், மகுடியாட்டம் என வீதியை சுற்றி ஆடுவர். நாங்கள் அப்போது சதிராட்டம் ஆடுவோம்” என்றார் முத்துக்கண்ணம்மாள்.


பரதநாட்டிய கலைஞர் வழுவூர் ராமையாபிள்ளை அக்கலையில் சிறந்துவிளங்கி, திரைத்துறையிலும் பங்காற்றியபோது, தன் தந்தை ராமச்சந்திரனை சென்னைக்கு அழைத்ததாகவும், ஆனால், இறைப்பணியை விடுத்து தன்னால் வர இயலாது என அவர் மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார் முத்துக்கண்ணம்மாள்.
அதேபோன்று, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ராமச்சந்திரனிடம் விராலிமலை குறவஞ்சியை கற்றுக்கொண்டு சென்றதாக, முத்துக்கண்ணம்மாளின் மகன் ராஜேந்திரன் தெரிவித்தார்.


பரதநாட்டியத்தின் தொடக்க வடிவமாகக் கருதப்படும் சதிர் நடனத்துக்கும் பரதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன என முத்துக்கண்ணம்மாள் வார்த்தைகளில்
“சதிர் நடனத்தை நாங்கள் பாடிக்கொண்டே ஆட வேண்டும். பரதநாட்டியத்தில் அப்படியல்ல. நட்டுவனார் என்ற கலைஞர்கள் பாடினால்தான் பரதநாட்டியம் ஆட முடியும். நாங்கள் அப்படியல்ல. பாடிக்கொண்டே ஆடுவோம். நாங்கள் எவ்வளவோ கஷ்டத்திலும் விளக்கு இல்லாமல் கூட ஆடியிருக்கிறோம். 200 படிகள் ஏறி கோயிலுக்கு சென்று ஆடியிருக்கிறோம். அதுவே எங்களுக்குப் பெருமை. மாதவிலக்கு நாட்களைத் தவிர தினமும் கோயிலுக்கு செல்வோம். நான் எழுதிவைத்துப் பாடுவதில்லை. எல்லா பாடல்களும் எனக்கு மனப்பாடம். எங்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. என்னுடன் ஆடியவர்களில் எல்லோரும் இறந்துவிட்டனர், இதில் கடைசி வாரிசாக நான் தான் இருக்கிறேன்”என்றார்.


தேவரடியார் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தாங்கள் விரும்பியவர்களை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டு வாழலாம்.
“என் கணவர் சினிமா கொட்டகையில் மேனேஜராக இருந்தார். என்னுடன் இணைந்துவாழ அவர் விரும்பியபோது நான் அவரிடம் சொன்னது, ‘நான் எப்போது வேண்டுமானாலும், ஆடுவேன், பாடுவேன், இதற்கு சம்மதம் என்றால் வாழலாம்’ என்றேன். இல்லையென்றால் வேண்டாம் என சொல்லிவிட்டேன். எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டு எங்கள் குடும்பத்துடன் இருந்து, நாங்கள் ஆடுவதற்கு அவர் ஒத்துழைப்பாக இருந்தார்” என்கிறார் முத்துக்கண்ணம்மாள்.


முத்துக்கண்ணம்மாளுக்கு கண்ணாமணி என்ற மகளும், ராஜேந்திரன் என்கிற மகனும் உள்ளனர். சதிர் நடனம் ஆடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோனதால், அக்கலையை கற்றுக்கொள்ளவில்லை கண்ணாமணி. மகன் ராஜேந்திரன் கூலி வேலை செய்கிறார்.
உலகம் முழுதும் புகழ்பெற்று விளங்கும் பரத கலைக்கு முன்னோடியாக திகழ்ந்த சதிர் நடனக்கலை இப்போது அழிந்துவரும் கலைகளுள் ஒன்றாக இருக்கிறது. சமகாலத்தில் வாழ்ந்துவரும், அக்கலையில் தேர்ந்த ஒரேயொருவரான முத்துக்கண்ணம்மாள்ளின் வாழ்வாதார நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.


அவரது குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 18 ஏக்கர் நிலமும் பல்வேறு காரணங்களால் கைவிட்டுப்போனது. தன் தாயாருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை எனக்கூறுகிறார் ராஜேந்திரன்.”அம்மாவுக்கு நலிவடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,000 வருகிறது. அவருக்கென சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. தன் மகள்வழி பேரன் வீட்டில் தான் வசிக்கிறார்” என்றார் ராஜேந்திரன்.தன் காலத்துக்குள் சதிர் நடனக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் உள்ளார் முத்துக்கண்ணம்மாள்.


“இப்போதும் எப்போதாவது ஆடுகிறேன். சிலர் என்னிடம் வந்து கற்றுக்கொள்கின்றனர். நடிகை சொர்ணமால்யாவுக்கு கற்றுக்கொடுத்தேன். கர்நாடகாவை சேர்ந்த சிலர் என்னிடம் வந்து இக்கலையை கற்றுக்கொண்டனர்” என்றார்.


83 வயதிலும், முருகன் திருமண வைபவம், விராலிமலை ஊரில் முருகனை அழைத்துவருவது, தெப்பத்திருவிழாவில் தெப்பத்திலிருந்து முருகனை அழைத்துவரும் நிகழ்ச்சிகளில் ஆடி வருகிறார் முத்துக்கண்ணம்மாள்.கொரோனா காலமாக இருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடவில்லை.பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதால் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதாக கூறும் முத்துக்கண்ணம்மாளுக்கு, சதிர் நடனத்திற்காக பள்ளி அமைத்து இக்கலையை பரப்ப அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பெருவிருப்பமாக இருக்கிறது.

குறிப்பு: அழிந்துவரும் சதிர் நடனக்கலை, அதனை ஆடிவந்த தேவதாசி இனத்தின் கடைசி பெண்மணி எதிர்கால சந்ததிக்கு வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *