• Tue. Oct 8th, 2024

குச்சனூரில் குடிக்கொண்ட சனீஸ்வர பகவான்…

Byகாயத்ரி

Mar 16, 2022

எல்லா கோவில்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் ஒருவராகத்தான் காட்சி தருகின்றார். தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக, தனியாக ஒரு கோவில் இருக்கிறது என்றால் அது இந்த குச்சனூர் சனிபகவான் கோவில் தான். இங்குள்ள சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீக்கியதாக வரலாறு கூறுகின்றது. ஏழரைச் சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.சனி பகவான் இங்கு சுயம்புவாக அருள் பாவிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்குத் தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாகக் கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வர பகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தைப் பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு எள் பொங்கல் வைப்பது.

பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாகக் குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. ‘உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது’. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். மன்னனுக்கு அசரீரி குரல் ஒலித்தபடி குழந்தை பிறந்தது. மன்னனுக்குப் பிறந்த குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். ஆனால் மன்னனுக்குப் பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது. அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. ‘வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்குச் சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது’ என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது.

இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தை வடிவமைத்து வழிபட்டான். ‘தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான்’ சந்திரவதனன். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன் தோன்றிய சனி பகவான் ‘உன்னைப் போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னைப் பிடித்ததற்குக் காரணம் உன் முன் ஜென்ம வினை தான் என்றும் கூறி’ மறைந்தார். இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புற்களைச் சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்று வரலாறு கூறுகிறது. குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது. அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *