
தேனி பங்களா மேட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளளார் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பண பலன்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5,200 – ரூ. 20,000 தர ஊதியம் ரூ.1,900 என கணக்கிட்டு ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலத்திலும், பணிக் காலத்திலும் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி நெடுஞ்சாலைத் துறையிலே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இணை செயலாளர் முத்தையா, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் தாஜுதீன், இணை செயலாளர்கள் அழகுராஜா, முருகேசன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
