• Fri. Apr 26th, 2024

மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்-முதல்வர் அறிவிப்பு

Byகாயத்ரி

Jan 6, 2022

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி சபையில் உரையாற்றினார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டார்.

சட்டசபை கூட்டத்தை இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் அதை கருத்தில் கொண்டு அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.


அந்த வகையில் இன்று சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் நடந்தது. மறைந்த உறுப்பினர்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சபாநாயகர் அப்பாவு அழைத்து கேள்வி கேட்க வைத்தார். அந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முதல் முறையாக நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் எந்தெந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எந்தெந்த துறை அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது.
பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) சென்னை மெட்ரோ ரெயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:- வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரெயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது.இந்த விரிவான இறுதித்திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. கூறும்போது, ‘முதல்வரின் அறிவிப்புக்கு எனது தொகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *