• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாக்கடை வசதி இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

Byமுகமதி

Sep 25, 2026

புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் வீடு வசதி வாரிய குடியிருப்பு இருக்கிறது. இதில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இரண்டு அடுக்குக் கொண்ட குடியிருப்பாகவும் புதிய குடியிருப்பு நாங்கள் அடுக்குகள் கொண்ட குடியிருப்பாகவும் இருக்கின்றன. பழைய குடியிருப்பின் விதிமுறைகள் வேறு. புதிய குடியிருப்பின் விதிமுறைகள் வேறு. இந்த நிலையில் தான் புதிய குடியிருப்பின் பகுதியில் இருந்து பழைய குடியிருப்பின் பகுதிக்குள் கழிவு நீர் வந்து வாய்க்கால் வழி ஓடுவது மட்டுமில்லாமல் வரும் மழைக்காலத்தில் பெரும் நோய் தொற்று அபாயம் ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்று கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இது குறித்து பாலன் நகர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் கலாதேவி என்ற பெண்மணி கூறுகையில்

நான் பாலன் நகர் பழைய ஹவுசிங் யூனிட்டில் 113 ஆம் நம்பர் வீட்டில் வசித்து வருகிறேன். இந்த ஹவுசிங் யூனிட் கட்டி 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஹவுசிங் யூனிட்டில் கழிவுநீர் போவதற்கு எந்த வழியும் கிடையாது. இந்த நிலையில் அருகில் உள்ள குளத்தை சமூக சேவகர் தீபா என்பவர் தனது சொந்தப் பணத்தில் தூர் வாருவதாக சொல்லி இருக்கிறார் அதை நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லை.
இந்த குளத்தை அவர் ஏன் தனது சொந்தப் பணத்தில் தூர்வார வேண்டும்? அரசு நிதி எதுவும் கிடையாதா?
இந்த குளத்தை சுத்தம் செய்கிறோம் என்கிற பெயரில் இங்கு இருக்கும் காம்பவுண்ட் சுவரை உடைத்து விட்டுச் சென்று விட்டார்கள். காம்பவுண்ட் இருக்கும்போதே திருடர்கள் இந்தப் பகுதியில் சுவர் ஏறி குதித்து இங்குள்ள வீடுகளில் உள்ள ஏசிகளை கழற்றிச் சென்று விட்டார்கள்.

இங்க இருந்து செல்லும் கழிவு நீர்ப் பாதையை அடைத்துவிட்டதால் இங்குள்ள 136 வீடுகளில் உள்ள கழிவு நீரும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இதோ இங்கு கிடக்கும் குப்பைகளை அகற்றாமல் குளத்தை சுத்தம் செய்கிறோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி என்றும் தெரியவில்லை இங்கு கிடக்கும் குப்பைகளாலும் கழிவுகளாலும் பாலன் நகர் மட்டுமல்ல புதுக்கோட்டை மாநகராட்சிக்கே டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று கோபமாகப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து இதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கூறுகையில் இப்பொழுதில் கட்டப்பட்டுள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இப்போது அதன் அருகிலேயே இன்னொரு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்குமே கழிவுநீர் வாய்க்கால் வசதி எந்த வகையிலும் செய்து கொடுக்கப் படவில்லை. இதனால் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன என்பதை நாங்கள் அரசுகளிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். இந்தப் பணிகள் செய்வதற்காக கடந்த அரசு 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதுக்கோட்டை மாநகராட்சிக்கு கொடுத்திருப்பதாக சொன்னார்கள்.

அதன்பிறகு மாநகராட்சியில் கேட்டபோது அந்த தொகை போதாது என்றும் ஒன்றரைக்கோடி ரூபாய் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் ஆனால் இன்னும் அந்த நிதி வரவில்லை என்று சொன்னார்கள். அந்த நிதியை கொடுத்து விட்டோம் என்று வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். அந்த நிதி எங்கள் கைக்கு வரவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்படி அதிகாரிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறுகிறார்கள் தவிர இங்குள்ள மக்களின் பிரச்சனை தீரவில்லை. இங்குள்ள மக்களுக்கு நோய் தொற்று வரும் முன்பாகவே உரிய அதிகாரிகளை நியமித்து இங்குள்ள கழிவு நீரை அகற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.

பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு வந்த குடும்பங்களின் நிலை வேறு. இப்போது புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு வந்த குடும்பங்களின் நிலையும் மனநிலையும் பொருளாதார வசதியும் வேறு. எல்லாவற்றையும் ஆய்வு செய்து அவர்களுக்கான பிரச்சனை தீர்க்க வேண்டிய கடமை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அதை செயல்படுத்தும் ஊழியர்களுக்கும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் எப்போது செய்யப் போகிறார்கள் என்பதுதான் அதிகாரிகள் கூறும் முடிவாக இருக்கின்றது.