• Fri. Apr 18th, 2025

இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Apr 16, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யும் இடமான இடுகாடு பகுதியில் தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து பட்டியலின மக்களின் இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கடந்த பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு மயானம் ஒன்று உள்ளது மயானத்திற்கு செல்லும் பாதையில் இறந்தவர்களுக்கு செய்யும் இறுதி மரியாதை அதாவது குடம் உடைக்கும் இடம் என்று சொல்லும் இடுகாட்டு பகுதி உள்ள இடம் மற்றும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் பட்டியல் இன மக்களின் ஒரு சிலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரின் தனிப்பிரிவு வாடிப்பட்டி வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடத்தில் மனு அளித்ததன் அடிப்படையில் இடு காடு மற்றும் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி வருபவர் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

இது முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் இடுகாடு மற்றும்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக பணிகளை நிறுத்த வேண்டும். மேலும் அந்த இடத்தில் பட்டியலின மக்களுக்கான இடுகாடு பகுதி என அறிவிப்பு பலகை நிரந்தரமாக வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.