

கருப்பா நதி அணையின் கீழ் பாப்பான்கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் கிழக்கலங்கல் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தொகையில் 90% பேர் விவசாய பணிகளை நம்பி தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர்.

அந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் நிரம்பி சுமார் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த குளத்தை நம்பி நேரடியாக 101 ஏக்கரும், மறைமுகமாக 70 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி நீர் உயர்ந்து கிணற்றுப் பாசனம் மூலமாகவும் சுமார் 300 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த குளம் நிரம்பாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை விட்டுவிட்டு வேறு பணிகளை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லக் கூடிய நிலை உள்ளது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை பெய்து நீர் நிலைகள் வேகமாக நிரம்பி உள்ளது.
கடையநல்லூரில் உள்ள கருப்பாநதி அணை நிரம்பி அதன் மூலம் கிடைக்கக்கூடிய நீர் விவசாய பணிக்கு பயன்படாமல் உள்ளது. கருப்பாநதியின் துணை நதியான அருவாதீட்டி ஆற்று நீர் மூலம் சீவலன்கால் கால்வாய் மூலம் 12 குளங்கள் நிறைந்து அங்கிருந்து செல்லும் உபரிநீர் அனுமதி நதியில் கலந்து வீணாக சிற்றாற்றில் கலக்கிறது. சீவலன் கால்வாய்க்கு கீழ் வரும் அட்டைகுளத்தில் வடக்கு மறுகால் பகுதியில் அதிக ஆக்கிரமிப்புகளால் பாப்பான் கால்வாய்க்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. வடக்கு மறுகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி பாப்பான் கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வி உள்ளிட்ட தி.மு.க-வினர் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ்யிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
சீவல்கால்வாய் பகுதிக்கு உட்பட்ட அட்டைகுளம் வடக்கு மறுகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாப்பான் கால்வாய்க்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, ஆலங்குளம், மேலநீலதநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஈச்சந்தா, ஊத்துமலை, சோலைச்சேரி போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்று தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாதன் தெரிவித்தார்.
